தி.மு.க., கட்டுப்பாட்டில் தைலாபுரம்; அப்பா - மகனை பிரித்தவர் ஜி.கே.மணி: அன்புமணி காட்டம்
தி.மு.க., கட்டுப்பாட்டில் தைலாபுரம்; அப்பா - மகனை பிரித்தவர் ஜி.கே.மணி: அன்புமணி காட்டம்
ADDED : டிச 10, 2025 06:06 AM

சென்னை: “தைலாபுரம் தோட்டமே தி.மு.க., கட்டுப்பாட்டில் தான் உள்ளது,” என்று, பா.ம.க., தலைவர் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்.
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பா.ம.க., நிர்வாகிகள் கூட்டத்தில், அக்கட்சி தலைவர் அன்புமணி பங்கேற்று பேசினார்.
அப்போது, அவர் கூறியதாவது: பா.ம.க.,வின் கட்சி ரீதியான ஒவ்வொரு ஒன்றியத்திலும் 25 கிராமங்கள் உள்ளன. அங்குள்ள வாக்காளர்களை, ஒன்றியச் செயலர் சந்தித்து கட்சியை பலப்படுத்த வேண்டும். விரைவில், பா.ம.க., இடம்பெறும் மெகா கூட்டணி அமைய உள்ளது. இதனால், வரும் சட்டசபைத் தேர்தலில், தி.மு.க., படுதோல்வி அடையும்; இது உறுதி.
கடந்த 2022ல் நான் பா.ம.க., தலைவரான அடுத்த நாளில் இருந்தே, எனக்கெதிரான சூழ்ச்சியை, கட்சியின் கவுரவச் செயலரான ஜி.கே.மணி துவக்கி விட்டார். எனக்கும், என் அப்பா ராமதாசுக்கும் இடையே பிளவை ஏற்படுத்தியதே அவர்தான். வன்னியர் இட ஒதுக்கீட்டிற்காக போராட்டம் நடத்தவிடாமல் துரோகம் செய்தவரும் அவர்தான்.
தேர்தல் கமிஷனை எதிர்த்து டில்லியில், ராமதாஸ் தரப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்த ஆர்ப்பாட்டத்தில், 30 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். ஆனால், 3,000 பேர் பங்கேற்றதாக கூறி, ராமதாசை ஜி.கே.மணி ஏமாற்றி இருக்கிறார்.
இதுவரை வன்னியர்களையும், பட்டியலின மக்களையும், ஒன்றுசேர விடாமல் தடுத்த தி.மு.க., இப்போது, பா.ம.க.,விற்குள்ளேயே குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் இருக்கும் தைலாபுரம் தோட்டத்தையே, ராமதாசுடன் கூடவே இருக்கும் சிலர் வாயிலாக தி.மு.க., கைப்பற்றி விட்டது; 87 வயதான ராமதாஸ், குழந்தை போல மாறிவிட்டார்.
தி.மு.க., கைக்கூலிகளும் துரோகிகளும், தினம் ஒரு பொய்யை சொல்லி, அவரை ஏமாற்றுகின்றனர். மனதளவில் பலவீனமாக உள்ள ராமதாசை, தங்கள் சுயநலத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர். நான் அவர்களை ஒருநாளும் மன்னிக்க மாட்டேன். அடுத்த மூன்று மாதங்களில், பலரும் சிறைக்கு செல்வர். யார் யார் என்பதை இப்போதைக்கு சொல்ல முடியாது. இவ்வாறு கூறினார்.

