வரவு - செலவு விபரம் வெளியிட்டது மின் வாரியம்; வருவாய் ரூ.1 லட்சம் கோடி; செலவு ரூ.98,344 கோடி
வரவு - செலவு விபரம் வெளியிட்டது மின் வாரியம்; வருவாய் ரூ.1 லட்சம் கோடி; செலவு ரூ.98,344 கோடி
ADDED : டிச 10, 2025 06:05 AM

சென்னை: நம் நாளிதழ் செய்தியை அடுத்து, 2024 - 25ம் நிதியாண்டிற்கான வரவு - செலவு அறிக்கையை மின் வாரியம் வெளியிட்டுள்ளது. மொத்த வருவாய், 1.04 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்த நிலையில், செலவு, 98,344 கோடி ரூபாயாக உள்ளது.
மின் உற்பத்தி கழகம், மின் பகிர்மான கழகம், மின் தொடரமைப்பு கழகம், பசுமை எரிசக்தி கழகம் ஆகிய நிறுவனங்களாக தமிழக மின் வாரியம் செயல்படுகிறது.
இதில், மாநிலம் முழுதும் மின் வினியோகம் செய்யும் பணியை, மின் பகிர்மான கழகம் மேற்கொள்கிறது.
இந்நிறுவனத்துக்கு, மின் கட்டணம் வாயிலாக வருவாய் கிடைக்கிறது. மின் கொள்முதல் போன்றவற்றுக்கு செலவு செய்கிறது.
பல ஆண்டுகளாக வரவை விட, செலவு அதிகம் இருப்பதால், தொடர்ந்து இழப்பை சந்தித்து வருகிறது.
மின் வாரிய நிறுவனங்கள், நிறுவன சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளன. ஒரு நிதியாண்டு முடிவடைந்ததில் இருந்து, ஆறு மாதங்களுக்குள் அந்தாண்டின் வரவு - செலவு விபரம் அடங்கிய நிதிநிலை அறிக்கையை தயாரிக்கும் பணியை முடித்து, பொது வெளியில் வெளியிட வேண்டும்.
இந்த அறிக்கையை மின் வாரிய நிறுவனங்கள் தயாரித்த நிலையில், அதை வெளியிடாமல் தாமதம் செய்து வந்தன.
இதுகுறித்து, நம் நாளிதழில் இம்மாதம், 4ம் தேதி செய்தி வெளியானது.
இதையடுத்து, வரவு - செலவு அறிக்கையை, இணையதளத்தில் மின் பகிர்மான கழகம் நேற்று வெளியிட்டுள்ளது.
அதன்படி, 2024 - 25ல் மொத்த வருவாய், 1.04 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. அந்தாண்டில் செலவு, 98,344 கோடி ரூபாயாக உள்ளது. இதில், 2,073 கோடி ரூபாய் லாபம் கிடைக்கும் சூழல் உருவானது.
ஆனால், பணியாளர்களின் வருங்கால பணப் பயன்களுக்காக, 2,500 கோடி ரூபாய் செலவிடப்படுவதால், மொத்த இழப்பு, 427 கோடி ரூபாயாக உள்ளது.
இது, முந்தைய ஆண்டான 2023 - 24ல், 4,436 கோடி ரூபாயாக அதிகமாக இருந்தது. கடந்த ஆண்டில் மொத்த இழப்பு குறைந்தததற்கு, மின் கட்டணம் உயர்வு, செலவு குறைப்பு நடவடிக்கை உள்ளிட்டவை, முக்கிய காரணங்களாக உள்ளன.

