பண்பாட்டு உரிமையை பறிப்பது சட்ட விரோதம்: தமிழக பா.ஜ.,
பண்பாட்டு உரிமையை பறிப்பது சட்ட விரோதம்: தமிழக பா.ஜ.,
ADDED : டிச 06, 2025 09:07 AM

சென்னை: 'வாரிசு அரசியலை மட்டும் முன்னிறுத்தி, மதுரையை வதைத்த நீங்கள், வளர்ச்சி அரசியலை பற்றி வாய் திறக்கவே அருகதையற்றவர்' என, முதல்வர் ஸ்டாலினுக்கு, தமிழக பா.ஜ., பதில் அளித்துள்ளது.
இதுகுறித்து, அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை:
மதுரை மீது திடீர் பாசம் கொண்டு வெள்ளனவே விழித்து, முதல்வர் ஸ்டாலின் பதிவு வெளியிட்டுள்ளார்.
மதுரை மாநகராட்சியில் 150 கோடி ரூபாய் முறைகேடு நடந்து, மேயரே ராஜினாமா செய்த கொடூரம்; இரு அமைச்சர்களின் பனிப்போரில் வளர்ச்சியின்றி பரிதவிக்கும் மாநகரம்; சென்னைக்கு போட்டியாக மதுரையும் வெள்ளத்தில் மிதந்த அவலம்; இன்று லந்தாக பதிவிடும் நீங்கள், இதெல்லாம் நடந்தபோது கண்காணாமல் போனது ஏன்?
அது சரி, வேளாண் கல்லுாரி அமைக்கப்படும் என்றும், சாத்தையாறு அணைக்கு புதிய கால்வாய் அமைக்கப்படும் என்றும், மதுரை மாவட்டத்திற்கு தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளாவது நினைவு இருக்கின்றனவா?
அதேபோல, தவறான திட்ட அறிக்கையால், மத்திய அரசு கொண்டு வந்த மெட்ரோ ரயில் திட்டத்தையும் தவற விட்டது நீங்கள் தான் என்பதையும் மக்கள் அறிவர்.
கொடுத்த வாக்குறுதிகளை மறந்தது போல, மதுரையின் முன்னேற்றத்தையும் நீங்கள் மறந்திருக்கலாம்.
ஆனால், மத்திய அரசோ தானாக முன்வந்து, 'எய்ம்ஸ்' திட்டத்தை மதுரைக்கு வழங்கியது. துரிதமாக நடந்து வரும் பணிகளால், வெகு விரைவில் எய்ம்ஸ் திறக்கப்படப் போகிறது. அன்று, நீங்கள் ஆட்சியில் இருக்க மாட்டீர்கள் என்பது வேற விஷயம்.
திருப்பரங்குன்றத்தில் காவல் துறையை வைத்து, நீங்கள் பண்பாட்டு உரிமையை பறிப்பது சட்ட விரோத செயல். எனவே, வாரிசு அரசியலை மட்டும் முன்னிறுத்தி மதுரையை வதைத்த நீங்கள், வளர்ச்சி அரசியலை பற்றி வாய் திறக்கவே அருகதையற்றவர் என்பதை உணருங்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

