ADDED : அக் 10, 2024 12:32 AM
சென்னை:''ஆர்.எஸ்.எஸ்., பேரணியை துவக்கி வைத்தது, தளவாய் சுந்தரத்தின் தனிப்பட்ட உரிமை. அதற்காக அவரை பொறுப்பில் இருந்து நீக்கியது தவறு,'' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கூறினார்.
அவர் அளித்த பேட்டி:
ஹரியானா மாநிலத்தில் பா.ஜ., வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பது குறித்து, பிரதமருக்கு கடிதம் வாயிலாக வாழ்த்து தெரிவித்திருக்கிறேன். ஜம்மு - காஷ்மீரில், பா.ஜ., பிரதான எதிர்க்கட்சியாக வந்திருக்கிறது. அதுவும் ஒரு வகையில் வெற்றிதான்.
அ.தி.மு.க.வின் பொறுப்புகளில் இருந்து தளவாய் சுந்தரம் நீக்கப்பட்டுள்ளது குறித்து, பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ்., பேரணியை துவக்கி வைத்தது, அவரது தனிப்பட்ட உரிமை. அதற்காக அவரை பதவி நீக்கம் செய்தது தவறு.
ஒரு கட்சியில் இருந்து கொண்டு, மற்றொரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளக் கூடாது என சட்டத்தில் எதுவும் இல்லை. அ.தி.மு.க.,வில் கடந்த மூன்று ஆண்டுகளாக நடக்கும் செயல்கள், மனிதாபிமானத்திற்கு உட்பட்டதாக தெரியவில்லை.
சென்னை கடற்கரையில் நடந்த சம்பவம் கண்டனத்துக்குரியது. பல லட்சக்கணக்கான மக்கள் கூடி இருந்த இடத்தில், தகுந்த பாதுகாப்பு, குடிநீர், உணவு வசதிகளை செய்து கொடுக்க, அரசு தவறி விட்டது.
ஜல்லிக்கட்டு பிரச்னையின் போது, 15 நாட்கள் இதைப்போன்ற கூட்டம் கூடியபோது, ஒரு சின்ன அசம்பாவிதம் கூட நடக்காமல், ஜெயலலிதாவின் ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு காப்பாற்றப்பட்டது. இப்போது, அரசு அஜாக்கிரதையாக நடந்து உள்ளது.
அ.தி.மு.க., இணைந்தால்தான் வெற்றி பெற முடியும் என்ற ஒரு சூழல் உருவாகி, நீண்ட நாட்கள் ஆகின்றன. அதை உணர வேண்டியவர்கள் உணர வேண்டும். உணரவில்லை என்றால், தொண்டர்கள் உணர வைப்பர்.
அ.தி.மு.க., இணைப்பு சம்பந்தமாக, நான் டில்லி செல்லவில்லை. தனிப்பட்ட பயணமாக சென்று வந்துள்ளேன்.
இவ்வாறு கூறினார்.

