எம்ஜிஆர் பற்றி சிறுமைப்படுத்தி பேசுவது முதிர்ச்சி அரசியல் அல்ல: திருமாவளவனுக்கு நயினார் கண்டனம்
எம்ஜிஆர் பற்றி சிறுமைப்படுத்தி பேசுவது முதிர்ச்சி அரசியல் அல்ல: திருமாவளவனுக்கு நயினார் கண்டனம்
UPDATED : ஆக 09, 2025 10:22 PM
ADDED : ஆக 09, 2025 10:09 PM

சென்னை: முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பற்றி சிறுமைப்படுத்தி பேசுவது முதிர்ச்சி அரசியல் அல்ல என்று விசிக எம்பி திருமாவளவனுக்கு தமிழக பாஜ தலைவர் நயினார் நகேந்திரன் கண்டம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும், ஏழை எளிய மக்களின் வாழ்வு நலம் பெறவும், சமூகத்தி மரவும். உலகத் தமிழர் சிறப்போங்கவும் தன் வாழ்வையே அர்ப்பணித்த ஒரு மாபெரும் மக்கள் தலைவரை இப்படி சிறுமைப்படுத்தி பேசுவது சற்றும் ஏற்புடையதல்ல.
சத்துணவு தொடங்கி சமூகநீதி வரை பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் உரிய நீதிக்காக பார்த்துப் பார்த்து சட்டங்களை வகுத்த தலைவரை, திமுக தருகிற சில தொகுதிகளுக்காக அவமானப்படுத்தி பேசியிருப்பது தமிழகத்தையே இழிவு செய்ததாகத்தான் பொருள். மறைந்த தலைவர்கள் குறித்து அவமதித்துப் பேசுவதும் சிறுமைப்படுத்தி பேசுவதும் முதிர்ச்சியான அரசியல் அல்ல என்பதை திமுக கூட்டணி கட்சியினர் உணர வேண்டும்.
அன்றைய திமுகவின் வெற்றிக்கு யாரை விடவும் எம்ஜிஆரின் பணி தான் காரணம் என்பதைப் புரிந்த அண்ணாதுரை அவரைத் தன் 'இதயக்கனி' என்றழைத்தார். அது உண்மை என்பது போலவே அவர் அதிமுக-வைத் துவக்கிய பிறகு கருணாநிதி தலைமையிலான திமுக வெற்றியின் நிழலைக் கூட தொட முடியவில்லை.
பிரதமர் நரேந்திர மோடி, முதன் முறை தமது இலங்கை பயணத்தின் போது. 'எம்ஜிஆர் என்கிற தேசியத் தலைவரை நீங்கள் தான் எங்களுக்கு கொடுத்தீர்கள்' என்று பெருமையோடு கூறினார். ஏழை எளிய மக்களின் வாழ்வை முன்னேற்ற அவருடைய வழியை பின்பற்றுவதாக பலமுறை தமிழகத்தில் பேசியுள்ளார். சென்னை ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயரை சூட்டி பெருமை செய்துள்ளார்.
பொதுவெளியில் ஒரு சமூகத்தின் பெயரைக் குறிப்பிட்டு அவதூறு பேசுவது தவறு என்று திருமாவளவனுக்கு தெரியாதா? குறிப்பிட்ட ஒரு சமூகம் என்பதால் தானே இவ்வாறு அவர் கூறியுள்ளார்? வேறு ஒரு சமூகம் என்றால் இப்படிப் பெயரைக் குறிப்பிட்டு வெளிப்படையாகப் பேசியிருக்க முடியுமா?
எனவே, இந்திய அளவில் அனைத்து தலைவர்களாலும் போற்றப்படுகின்ற, அனைத்து மக்களாலும் மதிக்கப்படுகின்ற, சாதி - மதத்திற்கு அப்பாற்பட்ட ஒரு தலைவரைப் பற்றி விமர்சிக்கும் போது அந்தப் பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும். எவ்வளவு முயன்றும் எம்ஜிஆர் புகழை அழிக்க முடியவில்லை என்ற காழ்ப்பில் திமுக தன் கூட்டணி கட்சிகளைத் தூண்டி அவர் மீது அவதூறு பரப்ப ஆரம்பித்துள்ளது அப்பட்டமாகத் தெரிகிறது.
மறைந்து இத்தனை காலத்திற்குப் பிறகும் அவருடைய பெயர் திமுகவிற்கு சிம்ம சொப்பனாக உள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி மக்களால் விரட்டியடிக்கப்படப் போவது இந்த நொடியில் இருந்து உறுதியானது.
இவ்வாறு நயினார் நாகேந்திரன் அறிக்கையில் கூறியுள்ளார்.