ADDED : மே 25, 2025 01:05 AM
சென்னை:போக்குவரத்து ஊழியர்களின் புதிய ஊதிய ஒப்பந்த பேச்சு, வரும் 29ம் தேதி சென்னையில் நடக்கிறது.
அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றும், 1.43 லட்சம் ஊழியர்களுக்கு, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்படுகிறது. 14வது ஊதிய ஒப்பந்தம் முடிந்து, ஓராண்டுக்கு மேலாகிறது. இன்னும் புதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்படவில்லை.
அதற்கான மூன்றாம் கட்ட பேச்சு, சென்னை குரோம்பேட்டையில் வரும் 29ம் தேதி நடத்தப்படும் என, தமிழக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
இதில், 80 தொழிற்சங்கங்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஊதிய ஒப்பந்தம், ஓய்வுகால பணப்பலன்கள், அரசு ஊழியர்களாக மாற்றம் ஆகியவை குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
இதுகுறித்து, ஐ.என்.டி.யு.சி., தொழிற்சங்க தலைவர் வில்சன், அரசு போக்குவரத்து கழக, 'ஸ்டாப் கரப்ஷன்' தொழிற்சங்க பொதுச்செயலர் காமராஜ் ஆகியோர் கூறியதாவது:
போக்குவரத்து ஊழியர்களின் நிலை மோசமாக இருக்கிறது. ஓய்வுகால பலன்களை பெற ஆண்டுக்கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது.
தங்களது பணத்தை பெற முடியாமல், கடைசி காலத்தில் மருத்துவம் போன்ற அத்தியாவசிய செலவுகளுக்காக, குடும்பத்தினரை சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்த நிலை மாற, போக்குவரத்து ஊழியர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும் என, 70க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்து உள்ளன.
அரசு ஊழியர்களாக மாற்றினால், ஓய்வுகால பலன்களை ஓய்வு பெறும் நாளிலேயே பெற முடியும். அகவிலைப்படி உயர்வு தாமதம் இன்றி கிடைக்கும். மேலும், ஒவ்வொரு புதிய ஊதிய ஒப்பந்தத்தின் போதும், ஆண்டுக்கணக்கில் காத்திருக்க வேண்டியதில்லை.
எனவே, போக்குவ ரத்து ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும். மேலும், புதிய ஊதிய ஒப்பந்தத்தில், 30 சதவீதம் உயர்வு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

