தாம்பரம் - கோவைக்கு சிறப்பு ரயில் வரும் பிப்., 9ம் தேதி வரை நீட்டிப்பு
தாம்பரம் - கோவைக்கு சிறப்பு ரயில் வரும் பிப்., 9ம் தேதி வரை நீட்டிப்பு
ADDED : டிச 15, 2024 09:41 AM
பொள்ளாச்சி : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தெற்கு ரயில்வே நிர்வாகம் சிறப்பு ரயில்களை இயக்க அனுமதி அளித்தது. அதில், சென்னை, தாம்பரத்தில் இருந்து, கோவைக்கு சிறப்பு ரயில் அக்., 11ம் தேதி முதல் நவ., 29ம் தேதி வரையும், கோவையில் இருந்து தாம்பரத்துக்கு அக்., 13ம் தேதி முதல், டிச.,1ம் தேதி வரை எட்டு முறையும் இயக்கப்பட்டது.
இந்நிலையில், சிறப்பு ரயில்வே சேவை மீண்டும் வரும், 2025ம் ஆண்டு பிப்., 9ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தாம்பரத்தில் இருந்து வெள்ளிக்கிழமைகளில், மாலை, 6:00 மணிக்கு கிளம்பும் ரயில், செங்கல்பட்டு, மேல்மருவத்துார், திண்டிவனம், விழுப்புரம், பன்ருட்டி, சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், ஒட்டன் சத்திரம், பழநி, உடுமலை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, போத்தனுார் வழியாக கோவையை அடைகிறது.
இதே வழித்தடத்தில், கோவையில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படுகிறது. இதற்கான ரயில்பெட்டிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
பொள்ளாச்சி ரயில் பயணியர் நலச்சங்கத்தினர் கூறுகையில், 'சென்னை, தாம்பரம் - கோவை வாராந்திர சிறப்பு ரயில் சேவை பிப்., 9ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பயணியர் பயன்பாடு அதிகரிப்பால், இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
ரயிலில், 11 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், ஏழு இரண்டாம் வகுப்பு முன்பதிவில்லா பெட்டிகள், இரண்டு எஸ்.எல்.ஆர்.,/ டி பெட்டிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த சேவையை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்,' என்றனர்.