உத்தர பிரதேச அரசு பள்ளிகளில் தமிழ்: கவர்னர் ரவி தகவல்
உத்தர பிரதேச அரசு பள்ளிகளில் தமிழ்: கவர்னர் ரவி தகவல்
ADDED : ஜன 27, 2026 08:21 AM

சென்னை: 'உத்தர பிரதேச மாநிலத்தின் அரசு பள்ளிகளில், மூன்றாவது மொழியாக தமிழை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது' என, கவர்னர் ரவி தெரிவித்து உள்ளார்.
கவர்னர், தன் குடியரசு தின உரையில் கூறியிருப்பதாவது:
ஜனநாயகம் என்பது வாழ்ந்து கொண்டிருக்கும் நம் பாரம்பரியம். இது, நம் மரபணுவில் இயங்குகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, நம் மக்களின் அன்றாட வாழ்க்கையில் பிரதிபலிக்கிறது.
நாட்டின் பண்டைய தன்னாட்சி மரபுகளுக்கு புகழ்மிக்க சான்றாக, உத்திரமேரூர் கல்வெட்டுகள் நிற்கின்றன. இந்த தொடர்ச்சியின் காரணமாக, ஜனநாயகத்தின் தாயாக இந்தியா உயர்ந்து நிற்கிறது.
காசி தமிழ் சங்கமத்தின் நான்காவது பதிப்பு, 'தமிழ் கற்கலாம்' என்ற கருப்பொருளுடன் கொண்டாடப் படுகிறது.
அதன்படி, உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த, 300க்கும் அதிகமான மாணவ - மாணவியர், தமிழகத்தின் பெருமைகளை அறிந்து, தமிழ் மொழியை கற்று, உணவு வகைகளை உண்டு ஆராய்ந்தனர். தமிழகத்தைச் சேர்ந்த 50க்கும் அதிகமான ஆசிரியர்கள், உத்தர பிரதேசம் சென்று, தமிழின் அடிப்படைகளை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தினர்.
இந்த பரிமாற்றங்களால் ஈர்க்கப்பட்ட உத்தர பிரதேச அரசு, பள்ளிகளில் தமிழை மூன்றாவது விருப்ப மொழியாக சேர்க்க முடிவு செய்துள்ளது.
மேலும், குவஹாத்தி பல்கலை, தமிழில் சான்றிதழ் மற்றும் டிப்ளமா படிப்புகளை வடகிழக்கு இளைஞர்களுக்கு வழங்க துவங்கி உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.

