'தோன்றிய காலத்தில் இருந்து தொன்மை மாறாத மொழி தமிழ்!'
'தோன்றிய காலத்தில் இருந்து தொன்மை மாறாத மொழி தமிழ்!'
ADDED : நவ 03, 2024 12:14 AM
சென்னை:''தோன்றிய காலத்தில் இருந்து, தொன்மை மாறாமல் இருப்பது தமிழ் மொழி,'' என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் பேசினார்.
உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் மணி விழா, சென்னையில் நேற்று நடந்தது. இதில், தமிழ் ஆய்விதழ் வெளியிடப்பட்டது. பின், அமைச்சர் சுப்பிரமணியன் பேசியதாவது:
தமிழுக்கான அங்கீகாரத்தை, கருணாநிதி பெற்று தந்த பின்தான், பிற மாநிலங்களும் தங்கள் மொழிக்கு செம்மொழி அங்கீகாரம் கேட்கத் துவங்கின. சமஸ்கிருதம் தொன்மை மொழி பட்டியலில் இருந்தாலும், 2005ல் செம்மொழி அங்கீகாரம் வழங்கப்பட்டது.
பின், 2008ல் தெலுங்கு, கன்னடம், 2013ல் மலையாளம், 2014ல் ஒடியாவுக்கு வழங்கப்பட்டது. முதலில் செம்மொழி அங்கீகாரம் கிடைத்த பெருமை, தமிழுக்கே உள்ளது.
உலகத்தில் உள்ள தொன்மை மொழியாக தமிழ், சமஸ்கிருதம், லத்தீன், கிரேக்கம், ஹீப்ரு, பாரசீகம், சீனம் உள்ளது. இதில், தோன்றிய காலத்தில் இருந்து, தொன்மை மாறாமல் இருப்பது தமிழ் மொழி மட்டும்தான்.
இவ்வாறு அவர் பேசினார்.
உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் பேசியதாவது:
மொழிகளுக்கு எல்லாம் தாய் மொழியாக தமிழ் விளங்குகிறது. உயிராய், உணர்வாய், தாயாய், தந்தையாய், காதலியாய் தமிழ் உள்ளது.
அதிக ஆய்வாளர்கள், திறனாய்வாளர்கள் மற்றும் மேதைகளை உருவாக்குகிறது. உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம், 1964ல் துவங்கியபோது, அண்ணா துரையும், 1970ல் கருணாநிதியும் பேசினர்.
மொழியை வாழ வைக்க, அண்ணாதுரை, கருணாநிதி, ஸ்டாலின் பல திட்டங்களை வகுத்தனர்.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது, கட்டாயம் எழுந்து நிற்க வேண்டும் என்ற சட்டம் இயற்றியது, தமிழுக்கு கிடைத்த சிறப்பு.
அரசு கட்டடங்களில், 'தமிழ் வாழ்க' என்ற மின்னொளி பலகை வைத்தது, பஸ்களில் திருக்குறள் எழுதியது, தமிழாசிரியர்கள் தலைமையாசிரியர்கள் ஆனது, தமிழறிஞர்களின் நுால்கள் நாட்டுடைமை ஆக்கியது என, திட்டங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.