தமிழ் மிகவும் உன்னதமான மொழி: கவர்னர் ரவி புகழாரம்
தமிழ் மிகவும் உன்னதமான மொழி: கவர்னர் ரவி புகழாரம்
ADDED : டிச 02, 2025 05:45 AM

சென்னை: நாகலாந்து மற்றும் அசாம் மாநிலங்கள் உருவான தினம், நேற்று கவர்னர் மாளிகையில் சிறப்பிக்கப்பட்டது.
இதில், கவர்னர் ரவி பேசியதாவது:
நாகாலாந்து, அசாம் மாநிலங்கள் உருவான தினத்தை, பிரதமர் மோடியால், தமிழகத்தில் சிறப்பித்து வருகிறோம். சுதந்திரத்திற்கு பின், பல மாநிலங்கள் உருவானதன் வாயிலாக, நாட்டின் பன்முக தன்மை குறித்து பிற மாநிலங்கள் அறிந்து கொள்ள வாய்ப்பாக அமைந்தது. மாநிலங்களை கொண்டாடும் போது, அவரவர் தனித்துவ கலாசாரம் கொண்டவர்கள் என்பதை உணர வேண்டும்.
பல மரங்கள் கொண்ட தோட்டம் எப்படி அழகாக இருக்குமோ, அதேபோல், பல மாநிலங்களின் தோட்டமாக இந்தியா விளங்குகிறது. கலாசாரத்தில் வேறுபாடு கொண்டதாக இருந்தாலும், ஒரே சிந்தனை கொண்டவர்களாக இருப்பது அவசியம். அசாம், தமிழகம் இடையே நீண்ட தொடர்பு உள்ளது.
நாம் கடந்த காலங்களை மறந்து வாழ்கிறோம். சங்கர்தேவ், சைதன்ய மகாபிரபு போன்ற ஆன்மிக தலைவர்களால் மாநிலங்களில் பக்தி பரவியது. அதே குரலாக, ஒரே பாரதம், உன்னத பாரதம் என்று சொல்லும்போது ஒரு உத்வேகம் கிடைக்கிறது.
தமிழ் மிகவும் உன்னதமான மொழி. தமிழ் மொழி, கலாசாரம் பிற மாநில மக்களிடம் கலப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கவர்னர் மாளிகை, குவஹாத்தி பல்கலை இணைந்து தமிழ் டிப்ளமோ படிப்பு துவங்கியது. பனாரஸ் இந்து பல்கலைகளில் ஏற்கனவே தமிழ் பாடத்திட்டம் உள்ளது. அங்கு தமிழ் கற்ற மாணவர்கள் இங்கு வந்துள்ளனர்.
தமிழ் மொழியை பிற மாநிலத்தவர் கற்பதில் இருக்கும் ஆர்வத்தை பார்க்கும்போது, மாநிலங்கள் இடையே ஆரோக்கியமான உரையாடல் வெளிப்படும். நாகாலாந்து அழகான மாநிலம். தமிழக மக்கள் நாகலாந்து சென்று அங்குள்ள மக்களுடன் உரையாட வேண்டும். 10 நாட்கள் கொண்டாட்டத்தில், அவர்கள் கலாசாரம், உணவு, உபசரிப்பு போன்ற பல அம்சங்களை பார்க்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், சென்னை - அசாம் அசோசியேஷன் தலைவர் கவுதம் டியோரி, சென்னை - வடகிழக்கு மாநில நலச்சங்க தலைவர் வாபன்கோஸ்ரீ, கவர்னரின் செயலர் கிர்லோஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

