'தமிழ் ஜனம்' தொலைக்காட்சி மைக் அகற்றம்; திருமுருகன் காந்திக்கு பா.ஜ., கண்டனம்
'தமிழ் ஜனம்' தொலைக்காட்சி மைக் அகற்றம்; திருமுருகன் காந்திக்கு பா.ஜ., கண்டனம்
ADDED : டிச 06, 2025 09:06 AM

சென்னை: சென்னை பிரஸ் கிளப்பில், 'தமிழ் ஜனம்' செய்தி தொலைக்காட்சியின் மைக்கை அகற்றிய, மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்திக்கு, தமிழக பா.ஜ., தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம், சென்னை 'பிரஸ் கிளப்' அரங்கில், திருமுருகன் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அங்கிருந்த 'தமிழ் ஜனம்' செய்தி தொலைக்காட்சியின் மைக்கை அகற்றுமாறு கூறியதுடன், அத்தொலைக்காட்சி நிருபரை வெளியேறுமாறு கூறியுள்ளார். 'சென்னை பிரஸ் கிளப்' என்பது, அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் சொந்தமானது.
இங்கு நடக்கும் செய்தியாளர்கள் சந்திப்புக்கு, அனைத்து ஊடகங்களும் வரலாம். நீங்கள் தடுப்பது பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரானது என தமிழ் ஜனம் நிருபர் எடுத்துக் கூறியும், அதை அவர் ஏற்கவில்லை. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழக பா.ஜ., தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை:
செய்தியாளர்கள் சந்திப்பில், நீங்கள் எந்த தொலைக்காட்சியின் நிருபர் என பா.ஜ.,வினர் கேட்டால், அதெப்படி கேட்கலாம் என பிரஸ் கிளப் நிர்வாகிகள் கொந்தளித்துள்ளனர்.
ஆனால், அதே பிரஸ் கிளப்பிலேயே உள்ள பத்திரிகையாளர்கள் சந்திப்பு அரங்கில், ஒரு ஊடகத்தை, ஊடகவியலாளரை, திருமுருகன் காந்தி அவமானப்படுத்தி உள்ளார்.
ஆனால், இதுகுறித்து, இது வரை சென்னை பிரஸ் கிளப் சார்பில் கண்டனம் தெரிவிக்கவில்லை. திருமுருகன் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்.
சென்னை பத்திரிகையாளர்கள் சங்கம் அறிக்கை: சென்னை பிரஸ் கிளப், பொதுமக்களுக்கும், ஊடகங்களுக்கும் இடையே ஒரு பாலமாக செயல்படக்கூடிய அமைப்பு.
ஆகவே, பொதுவான ஒரு இடத்தில், தனிப்பட்ட நபர்களின், அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு பத்திரிகையாளர்களையும், ஊடகங்களையும் தனிமைப்படுத்துவதை, ஒருபோதும் ஏற்க முடியாது.
இவ்வாறு அந்த அறிக்கைகளில் கூறப் பட்டுள்ளது.

