தமிழ் கற்கும் வட மாநில குழந்தைகள் ஓசூர் அருகே அரசு பள்ளியில் ஆர்வம்
தமிழ் கற்கும் வட மாநில குழந்தைகள் ஓசூர் அருகே அரசு பள்ளியில் ஆர்வம்
ADDED : பிப் 17, 2025 07:49 AM
ஓசூர் : ஓசூர் அருகே அரசு நடுநிலைப்பள்ளியில், தமிழக மாணவர்களுக்கு இணையாக, வடமாநில குழந்தைகளும் தமிழ் படிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், பீஹார் உட்பட பல்வேறு வடமாநில தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி, தொழிற்சாலை, ரோஜா தோட்டம், செங்கல்சூளை, கோழிப்பண்ணைகளில் பணிபுரிகின்றனர்.
தங்கள் குழந்தைகளை அப்பகுதி அரசு பள்ளிகளில் சேர்த்துள்ளனர். குறிப்பாக, பேடரப்பள்ளி, உளிவீரனப்பள்ளி, பேலகொண்டப்பள்ளி, கொத்தகொண்டப்பள்ளியில், அரசு பள்ளிகளில் வடமாநில குழந்தைகள் அதிகமாக படிக்கின்றனர்.
இதேபோல், ஓசூர் அருகே ஜீமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் அதிக எண்ணிக்கையில் வடமாநில குழந்தைகள் படிக்கின்றனர். இங்கு எல்.கே.ஜி., முதல், 8ம் வகுப்பு வரை, 180 மாணவ - மாணவியர் பயில்கின்றனர். இதில், 90 பேர் வடமாநில குழந்தைகள்.
இப்பள்ளியில் தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, ஆங்கிலம், ஹிந்தி மொழியிலும் பாடம் கற்றுக் கொடுக்கப்படுகிறது.
ஆனாலும், வடமாநில குழந்தைகள், தமிழ் மொழியில் ஆர்வத்துடன் கல்வி கற்கின்றனர். தமிழ்த்தாய் வாழ்த்து, திருக்குறள் ஆகியவற்றை சரளமாக கூறி அசத்துகின்றனர். பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:
தமிழக அரசின் காலை உணவு திட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், மாணவ - மாணவியருக்கு ஆண்டுக்கு, நான்கு இலவச சீருடை மற்றும் நோட்டு புத்தகங்கள், எழுது பொருட்கள், காலணி, புத்தக பை இலவசமாக கிடைக்கிறது.
இதனால் ஈர்க்கப்படும் வடமாநில தொழிலாளர்கள், தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் அதிகம் சேர்த்து வருகின்றனர். சில ஆண்டுகளாக, அரசு பள்ளிகளில் வடமாநில குழந்தைகள் சேர்க்கை அதிகரித்துள்ளது. தமிழக மாணவ - மாணவியருக்கு இணையாக, வட மாநில குழந்தைகள் தமிழ் படிக்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

