கொத்தடிமை இல்லாத தமிழகம்; அமைச்சர் கணேசன் விருப்பம்
கொத்தடிமை இல்லாத தமிழகம்; அமைச்சர் கணேசன் விருப்பம்
ADDED : பிப் 11, 2025 04:36 AM
சென்னை : ''தமிழகத்தை கொத்தடிமைகள் இல்லாத மாநிலமாக உருவாக்க பாடுபடுவோம்,'' என, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் தெரிவித்தார்.
மாநில அளவில், கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு கூட்டம், சென்னை தி.நகரில் நேற்று நடந்தது.
இதில், அமைச்சர் கணேசன் பங்கேற்று, கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு, கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார்.
கடந்த 2023 - 2024ம் ஆண்டில், கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பில், சிறப்பாக பணிபுரிந்தோருக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
அப்போது, அவர் பேசியதாவது:
மாநிலத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறையை, முழுதுமாக ஒழிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கொத்தடிமை தொழிலாளர்கள் கண்டறியப்பட்டால், அவர்கள், 24 மணி நேரத்திற்குள் மீட்கப்பட்டு, உடனடியாக நிவாரண தொகை வழங்கப்படுகிறது.
அந்த வகையில், தி.மு.க., அரசு பொறுப்பேற்றது முதல், தமிழகத்தில் 570 கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு நிவாரண தொகையாக, 1.89 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது.
மீட்கப்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த, மறுவாழ்வு நடவடிக்கையும், நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகின்றன.
வரும் 2030க்குள், தமிழகத்தை கொத்தடிமை தொழிலாளர்கள் இல்லாத மாநிலமாக உருவாக்க, அனைவரும் பாடுபடுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.

