ADDED : ஜூலை 04, 2025 12:51 AM
சென்னை:ரஷ்யாவில் நடக்க உள்ள இந்திய கோடை விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக கலைக்குழுவினர் ரஷ்யா சென்றனர்.
ரஷ்ய நாட்டில் உள்ள இந்திய துாதரகம், மாஸ்கோவில் இந்திய கோடை விழாவை, நாளை முதல் 13ம் தேதி வரை நடத்துகிறது.
இதில், தமிழகம் உள்ளிட்ட சில மாநில கலைஞர்கள் பங்கேற்று, கலை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர். தமிழக கலைக்குழுவினர் 20 பேர், 5ம் தேதி மற்றும் 6ம் தேதி தமிழிசை, பரதநாட்டியம், தெருக்கூத்து, தோல்பாவை கூத்து நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.
திருபுவனம் ஆத்மநாதன் குழுவினர் தமிழிசை நிகழ்ச்சி; சென்னை சாய்கிருபா குழுவினர் பரதநாட்டியம்; காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, சேலம் குழுவினர் தெருக்கூத்து; கன்னியாகுமரி தோவாளை முத்துசந்திரன் குழுவினர் தோல்பாவை கூத்து நிகழ்ச்சி போன்றவற்றை நடத்துகின்றனர்.
ரஷ்யா செல்லும் கலைக்குழுவினர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் சாமிநாதனை நேற்று சந்தித்தனர்.
அப்போது, கலை பண்பாடு மற்றும் ஹிந்து அறநிலையத்துறை செயலர் மணிவாசன், கலை பண்பாட்டு துறை இயக்குநர் கவிதா ராமு, இணை இயக்குநர் கீதா ஆகியோர் உடன் இருந்தனர். சந்திப்புக்கு பின், கலைக்குழுவினர் ரஷ்யா புறப்பட்டு சென்றனர்.