100 நாள் வேலை ஊதியம் வழங்க ரூ.1,635 கோடி தமிழகம் கேட்பு: நிர்மலாவிடம் தங்கம் தென்னரசு மனு
100 நாள் வேலை ஊதியம் வழங்க ரூ.1,635 கோடி தமிழகம் கேட்பு: நிர்மலாவிடம் தங்கம் தென்னரசு மனு
ADDED : ஜன 28, 2025 05:50 AM

சென்னை : ஊரக வேலை திட்ட தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க, 1,635 கோடி ரூபாயை விடுவிக்கும்படி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், தமிழக அரசு தரப்பில் நேற்று நேரில் வலியுறுத்தப் பட்டது.
மத்திய அரசின் ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 85 லட்சம் குடும்பங்களை சேர்ந்த, 1.09 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர்.
இதில், 86 சதவீத பெண் தொழிலாளர்களுக்கு வேலை வழங்கப்படுகிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின குடும்பங்களுக்கு, 29 சதவீத வேலை வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள், இத்திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்புகளை பெற்று வருகின்றனர். இத்திட்டத்தில், 2024 நவம்பர் 27 முதல், தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. அதற்கான நிதியை விடுவிக்க வலியுறுத்தி, கடந்த 13ல் பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.
ஊதியம் விடுவிக்காத நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை, தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, ஊரக வளர்ச்சி துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, எம்.பி., கனிமொழி ஆகியோர் புதுடில்லியில் நேற்று சந்தித்தனர். ஊதிய நிலுவைத் தொகையான, 1,635 கோடி ரூபாயை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தினர்.
'நடப்பாண்டுக்கான வேலை நாட்களுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும்; தமிழகத்தில் இத்திட்டம் சிறப்பாக செயல்பட தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும்' என்று கோரி, கடிதமும் அளித்தனர்.