தமிழக பா.ஜ., பலுான் போன்றது; ஊசியால் குத்தினால் வெடிக்கும்: சேகர்
தமிழக பா.ஜ., பலுான் போன்றது; ஊசியால் குத்தினால் வெடிக்கும்: சேகர்
ADDED : மார் 24, 2025 05:15 AM

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் எஸ்.வி.சேகர் அளித்த பேட்டி:
வரும் 2026 சட்ட சபை தேர்தலில், தி.மு.க., முழு மெஜாரிட்டியுடன் வெற்றி பெறும். தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தான் மீண்டும் முதல்வர்.
மண்ணை கவ்வும்
மதத்தை வைத்து, தமிழகத்தில் பா.ஜ., அரசியல் செய்கிறது. அது எடுபடாது. தமிழகத்தை பொறுத்தவரை, பா.ஜ., வளர்ச்சி என்பது ஊதப்பட்ட பலுான் போன்றது; பார்த்தால் பெரிதாகத் தெரியும். ஆனால், சின்ன ஊசி குத்தினால் கூட வெடித்து சிறுத்து விடும்.
தமிழக பா.ஜ.,வுடன், அ.தி.மு.க., கூட்டணி சேர்ந்தால், கட்டாயம் அ.தி.மு.க., மண்ணை கவ்வும். பா.ஜ.,வுடன் எந்த கட்சி கூட்டணி சேர்ந்தாலும், அக்கட்சிக்கு பூஜ்ஜியம் தான் கிடைக்கும்.
நல வாரியம்
கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் இருந்தது போன்ற நிலை இப்போது இல்லை. பிராமணர்களுக்கு பாதுகாப்பு உள்ளது. ஹிந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்திடம் சென்று, எந்த பிராமணரும் தன் சமூகத்துக்கு பாதுகாப்பு வழங்குங்கள் என கேட்கவில்லை.
தமிழகத்தில், 10 லட்சம் பிராமணர்கள் ஏழ்மை நிலையில் உள்ளனர். அவர்களுக்கு நல வாரியம் தேவை. முதல்வரிடம் கேட்டுள்ளேன்.
அதை முதல்வர் ஸ்டாலின் செய்து கொடுத்தால், தமிழகம் முழுதும் தி.மு.க.,வுக்காக நான் பிரசாரம் செய்வேன். ஐந்து லட்சம் பிராமனர்கள் ஓட்டையும் தி.மு.க.,வுக்கு வாங்கிக் கொடுப்பேன். அதனால், ஸ்டாலின் அதை செய்து கொடுப்பார். மற்றபடி, நான் எந்த கட்சியிலும் சேரப் போவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.