'அறநிலைய துறையை ஒழிப்பது தேர்தல் வாக்குறுதியாக இருக்கும்' தமிழக பா.ஜ., உறுதி
'அறநிலைய துறையை ஒழிப்பது தேர்தல் வாக்குறுதியாக இருக்கும்' தமிழக பா.ஜ., உறுதி
ADDED : ஜன 11, 2026 02:38 AM

மதுரை: ''தமி ழகத்தில் அறநிலையத்துறையை முற்றிலும் ஒழிப்பது பா.ஜ.,வின் தேர்தல் வாக்குறுதியில் இருக்கும்,'' என அக்கட்சியின் மாநில பொதுச் செயலர் ராம சீனிவாசன் பேசினார்.
மதுரையில், 'ஸ்மார்ட் பார் பாரத்' அமைப்பு சார்பில் 'அறநிலையத்துறை அவசியமா, அனாவசியமா' தலைப்பில் கலந்துரையாடல் நடந்தது.
இதில் ராம சீனிவாசன் பேசியதாவது:
தமிழகத்தில் அறநிலையத்துறையின் கீழ் 40,000 கோவில்கள், தனியாரிடம் 10,000 கோவில்கள் உள்ளன. தனியார் நிர்வகிக்கும் கோவில்கள் நன்றாக பராமரிக்கப்படுகின்றன. தமிழகத்தில் மட்டுமே அறநிலையத்துறை உள்ளது.
வெளிநாட்டு முதலீடு மற்ற மாநிலங்களில் கோவில்களை நிர்வகிக்க டிரஸ்ட் உள்ளது. கேரளாவில் தேவசம் போர்டு உள்ளது. கோவில்களில் மாநில அரசுகள் தலையிடுவதில்லை.
கடந்த 1920ல் தான் அறநிலையத்துறை உருவாக்கப்பட்டது. அதற்கு முன் கோவில் நிர்வாகம் நன்றாக இருந்தது. மதச்சார்பற்ற அரசுக்கு கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலங்களில் வேலை இல்லை.
அதுபோல் கோவில்களும் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடாது. அறநிலையத்துறையை முற்றிலும் ஒழிப்பது பா.ஜ.,வின் தேர்தல் வாக்குறுதியாக இருக்கும்.
மக்கள் உழைத்து, ரத்தம் சிந்தி, அர்ப்பணிப்புடன் கோவில்களை உருவாக்கினர். அவற்றில் மன்னர்கள் வசதிகள் செய்து கொடுத்தனர். மக்கள் கட்டிய கோவில்களை பக்தர்கள்தான் நிர்வகிக்க வேண்டும்.
கோவில்கள் வாயிலாக கிடைக்கும் வருவாயில் 40 சதவீதத்தை ஊழியர்களின் சம்பளத்திற்கும், மீதியை நிரந்தர வைப்புத் தொகை முதலீடு, திருவிழா உள்ளிட்டவற்றிற்கு செலவிட வேண்டும்.
தி.மு.க., ஆட்சியில், 3,000 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தியதாக அமைச்சர் சேகர்பாபு கூறுகிறார். இதற்கு அரசு செலவிட்ட தொகை எவ்வளவு. அயோத்தியில் ராமர் கோவில் கட்டியதால், அங்கு 32,000 கோடி ரூபாய்க்கு வெளிநாட்டு முதலீடு வந்துள்ளது.
அதுபோல் திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்றினால்தான் பொருளாதார வளர்ச்சி ஏற்படும்.
அங்கு மலை உச்சி தீபத்துாணில் நீதிமன்றம் உத்தரவிட்டும் கார்த்திகை தீபம் ஏற்ற முடியவில்லை. அறநிலையத்துறை தேவையற்றது
இவ்வாறு அவர் கூறினார்.
கூச்சல், குழப்பம் கூட்டத்தில் பேசிய உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ராஜசேகரன், “அரசியலமைப்பு சட்டப்படி ஒவ்வொரு மதத்தினரும் அவரவர் கோட்பாடுகளை பின்பற்றலாம். தமிழகத்தில் ஐந்து ஆண்டுகளில் அதிக கோவில்கள் புனரமைக்கப்பட்டுள்ளன. கோவில்களுக்கு சொந்தமான 8,000 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
''அறநிலையத்துறைக்கு அரசு 1,187 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. அறநிலையத்துறை இருந்தால்தான் தவறுகள் தடுக்கப்படும்.
''திருப்பரங்குன்றம் தீபத்துாண் வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், வழக்கறிஞராக இருந்தபோது குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு விசுவாசமாக இருந்தவர். அவர் தீபத்துாண் வழக்கை விசாரிக்காமல் விலகி இருந்திருக்க வேண்டும்,” என்றார்.
அவரது கருத்துக்களுக்கு, கூட்டத்தில் பங்கேற்றவர்கள் ஆட்சேபம் தெரிவித்ததால் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.

