சிறுபான்மையினர் ஓட்டுகள் பெற தமிழக பா.ஜ., திடீர் திட்டம்
சிறுபான்மையினர் ஓட்டுகள் பெற தமிழக பா.ஜ., திடீர் திட்டம்
ADDED : ஜூன் 14, 2025 03:08 AM

சென்னை: 'பா.ஜ., மதவாத கட்சி, சிறுபான்மையினருக்கு எதிரானது' என்ற தி.மு.க.,வின் குற்றச்சாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க, பா.ஜ., மேலிடம் முடிவு செய்துள்ளது.
இதற்காக, 2026 சட்டசபை தேர்தலில், சிறுபான்மையினரின் ஓட்டுகளில், 10ல் இரண்டு ஓட்டுகளையாவது வாங்க வேண்டும் என்பதற்காக, அவர்களின் நீண்ட கால கோரிக்கைகள் என்ன என்பதை கேட்டறிந்து, நிறைவேற்ற உள்ளது. இதற்கான விபரங்களை, அக்கட்சி சேகரித்து வருகிறது.
பொய் குற்றச்சாட்டு
இது குறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:
தமிழகத்தை சேர்ந்த முஸ்லிம்களில், பலர் துபாய், சவுதி அரேபியா, குவைத் என, ஐக்கிய அரபு நாடுகளில் வேலை செய்கின்றனர். அந்நாடுகள், பிரதமர் மோடிக்கு மிகப்பெரிய விருதுகளை வழங்கி கவுரவிக்கின்றன.
கடந்த ஆண்டு இத்தாலியில், 'ஜி7' உச்சி மாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடி, போப் பிரான்சிசை சந்தித்தார். அப்போது போப், மோடியை ஆரத்தழுவினார்.
உலகில் இஸ்லாம், கிறிஸ்துவத்துக்கு தலைமை வகிக்கும் நாடுகள் அனைத்தும் பிரதமர் மோடியை விரும்புகின்றன. ஆனால் தமிழகத்தில், 'மோடி சிறுபான்மையினருக்கு எதிரானவர்.
பா.ஜ., மதவாத கட்சி, முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவர்களுக்கு எதிரான கட்சி என, தி.மு.க., தொடர்ந்து பொய்யான குற்றச்சாட்டை தெரிவித்து வருகிறது.
'வக்ப்' உள்ளிட்ட சட்டங்கள் தொடர்பாக, மத்திய அரசின் மீது, உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுகளை, தி.மு.க., கூறி வருகிறது.
தமிழகம் தவிர, மற்ற அனைத்து மாநிலங்களிலும், பா.ஜ.,வுக்கு ஹிந்துக்களை போல், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் ஓட்டளிக்கின்றனர். தமிழகத்தில், அவர்களை ஏமாற்றி, தி.மு.க., ஓட்டுகளை வாங்குகிறது.
வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க., ஆட்சிக்கு வரக் கூடாது என்பதில், பா.ஜ., மேலிடம் தீவிரமாக உள்ளது.
எனவே, அக்கட்சி தொடர்ந்து ஏமாற்றி பெறும், முஸ்லிம், கிறிஸ்துவர்கள் ஓட்டுகளை பெற, பா.ஜ., வியூகம் வகுத்துள்ளது.
10க்கு இரண்டு
அவர்களின் ஓட்டுகள் மொத்தமாக கிடைக்கவில்லை என்றாலும், 10 ஓட்டுகளுக்கு, இரண்டு ஓட்டையாவது கட்டாயம் பெற வேண்டும் என, திட்டமிட்டுள்ளது.
இதற்காக, இரு சமூகத்தினரும் அதிகம் வசிக்கும் பகுதிகளில், அவர்களின் நீண்ட கால கோரிக்கைகள், மத்திய அரசிடம் எதிர்பார்க்கும் நலத்திட்ட உதவிகள் என்ன என்பதை, மேலிடத் தலைவர்கள், தங்களுக்கு வேண்டிய நபர்களை ஆய்வுக்கு அனுப்பி, அது தொடர்பான விபரங்களை சேகரித்து வருகின்றனர். அவை, தலைவர்களின் கவனத்திற்கு எடுத்து செல்லப்படும்.
பின், மத்திய அமைச்சர்களை, தமிழகத்திற்கு அனுப்பி, முஸ்லிம், கிறிஸ்துவர்கள் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சு நடத்தி, கோரிக்கைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.
இதனால், மதவாத கட்சி என்ற பொய்க் குற்றச்சாட்டு முறியடிக்கப்பட்டு, தி.மு.க.,வுக்கு முழுதுமாக ஓட்டுகள் விழுவது தடுக்கப்படும்.
இதனால் சிறுபான்மையினரின் ஓட்டுகள் பா.ஜ.,வுக்கு கிடைக்காது என்ற பொய் தகர்க்கப்படும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.