'டப்பிங் படம் பார்த்தது போல தமிழக பட்ஜெட் உள்ளது': அண்ணாமலை
'டப்பிங் படம் பார்த்தது போல தமிழக பட்ஜெட் உள்ளது': அண்ணாமலை
UPDATED : பிப் 20, 2024 07:10 AM
ADDED : பிப் 20, 2024 12:07 AM

மறைமலை நகர்:பா.ஜ., தலைவர் அண்ணாமலையின் என் மண்; என் மக்கள் பாதயாத்திரை, செங்கல்பட்டு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட மறைமலை நகரில் நடந்தது.
அப்போது, அண்ணாமலை பேசியதாவது:
காங்கிரஸ் ஆட்சியில் மோசமாக இருந்த இந்திய பொருளாதாரம், கடந்த 10 ஆண்டுகளில் உலகின் 5வது இடத்திற்கு உயர்ந்துள்ளது.
தேர்தலின் போது சொன்ன, 295 வாக்குறுதிகளையும் நிறைவேற்றிய ஒரே கட்சி பா.ஜ., மட்டுமே. 2024 --- 28ம் ஆண்டுகளில், இந்தியா 3வது பெரிய பொருளாதார நாடாக வளரும்.
இன்று தாக்கல் செய்யப்பட்டு உள்ள தமிழக பட்ஜெட் 'டப்பிங்' படம் பார்த்தது போல உள்ளது. இலவச வீடு திட்டம், பிரதமர் கிராம சாலை திட்டம் போன்ற மத்திய அரசின் திட்டங்களுக்கு, மாநில அரசு தமிழில் புதிதாக பெயர் வைத்துள்ளது.
உள்ளூர் மக்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்ல, தனி பேருந்து பிடித்து செல்ல வேண்டி உள்ளது. இது சென்னை பேருந்து நிலையம் இல்லை; செங்கல்பட்டு பேருந்து நிலையம்.
செங்கல்பட்டு மாவட்டத்திற்கு, மத்திய அரசு தாம்பரம் --- செங்கல்பட்டு மூன்றாவது ரயில் பாதை, செங்கல்பட்டு ரயில் நிலையம் புதுப்பிக்கும் பணிகள் என, பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை செய்து வருகிறது.
இந்த பாதயாத்திரையின் இறுதி நிகழ்வு, பல்லடத்தில் வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதில், பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
இவ்வாறு அவர் பேசினார்.

