தமிழக அமைச்சரவை மிக விரைவில் ... மாற்றம்: சென்னை திரும்பிய ஸ்டாலின் தகவல்
தமிழக அமைச்சரவை மிக விரைவில் ... மாற்றம்: சென்னை திரும்பிய ஸ்டாலின் தகவல்
ADDED : செப் 14, 2024 10:07 PM

சென்னை: ''தமிழக அமைச்சரவை மிக விரைவில் மாற்றி அமைக்கப்படும்,'' என, அமெரிக்க பயணத்தை நிறைவு செய்து, நேற்று சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்ற முதல்வர், நேற்று காலை சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவருக்கு, அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின், விமான நிலையத்தில் ஸ்டாலின் அளித்த பேட்டி:
அமெரிக்க பயணம் வெற்றிகரமானதாகவும், சாதனைக்குரியதாகவும் அமைந்திருந்தது. அமெரிக்காவில் இருந்த 14 நாட்களும், மிக பயனுள்ளதாக அமைந்தது.
11,516 பேருக்கு வேலை
உலகின் புகழ் பெற்ற, 25 நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்தேன்; அப்போது, 19 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இவற்றின் வழியே தமிழகத்திற்கு, 7,616 கோடி ரூபாய் முதலீடு வந்திருக்கிறது. அதனால், 11,516 பேருக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த முதலீடுகள், திருச்சி, மதுரை, கோவை, கிருஷ்ணகிரி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் என, பல்வேறு மாவட்டங்களில் செய்யப்பட உள்ளன. பல நிறுவனங்கள் வரும் காலத்தில் தமிழகம் வர விருப்பம் தெரிவித்துள்ளன.
தமிழகத்தில், 30 ஆண்டு களாக செயல்பட்டு, சில சூழ்நிலைகளால் உற்பத்தியை நிறுத்திய போர்டு நிறுவனம், எங்கள் வேண்டுகோளை ஏற்று, மறைமலைநகரில் உள்ள தொழிற்சாலையில், மீண்டும் கார்கள் உற்பத்தியை துவக்க முன்வந்துள்ளது. அவர்கள் உற்பத்தியை துவக்குவதற்கான அனைத்து உதவிகளையும் வழங்க உத்தரவிட்டுஉள்ளேன்.
என் கனவு திட்டமான, 'நான் முதல்வன்' திட்டம் வழியே, தமிழக இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்க, 'கூகுள்' நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட உள்ளது.
'ஆட்டோ டெஸ்க்' நிறுவனத்துடன், தமிழக இளைஞர்களின் திறன்களை மேம்படுத்தவும்; குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், 'ஸ்டார்ட் அப்' உள்ளிட்ட தொழில்துறை சுற்றுச்சூழல் அமைப்புகளில் போட்டி தன்மையை மேம்படுத்தவும், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இதன் வழியே, உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்கள், முதலீடு செய்ய விரும்பும் மாநிலமாக தமிழகம் உள்ளது நிரூபிக்கப்பட்டு உள்ளது.
சான்பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோ நகரில், தமிழ் கூட்டமைப்பு மற்றும் தமிழ் சங்கங்கள் சார்பில் நடந்த அமெரிக்க வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, தமிழகத்தில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது.
இவ்வாறு கூறினார்.
பவள விழா
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா என்ற கேள்விக்கு, ''தி.மு.க., சொன்னதை தான் செய்யும்; சொல்வதையே செய்யும். ஒரே வரியில் சொல்லி விடுகிறேன். தி.மு.க., பவள விழாவை கொண்டாட உள்ளது.
''நிச்சயமாக, உறுதியாக, நீங்கள் எதிர்பார்க்கக் கூடிய சூழ்நிலை உருவாகும் என நம்புகிறேன்,'' என்று பதில் அளித்து, அமைச்சரவை மாற்றத்தை உறுதி செய்தார். இது, அமைச்சர்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
தி.மு.க., பவள விழா நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது.