UPDATED : செப் 25, 2024 11:44 PM
ADDED : செப் 25, 2024 11:41 PM

சென்னை : தமிழகத்தில் உள்ள எந்த சுங்கச் சாவடியும் மூடப்படாது; 'டோல்' கட்டணமும் குறைக்கப்படாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 6,600 கி.மீ., நீளத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. இவற்றில் 65 சுங்கச் சாவடிகள் உள்ளன. இதில் 22 சாவடிகள் நீண்ட காலத்துக்கு முன் அமைக்கப்பட்டவை.
சாலை அமைப்பதற்கு ஆன செலவு தொகை வசூலான பின், சுங்க கட்டணம் 40 சதவீதமாக குறைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.
ஆனால், போக்குவரத்து அமைச்சகம் அவ்வாறு குறைக்கவில்லை. மாறாக, ஒவ்வொரு ஆண்டும் கட்டணத்தை 10 சதவீதம் உயர்த்தி வருகிறது.
சீரமைக்கும் பணி
இதனால், போக்குவரத்து செலவு கணிசமாக அதிகரிக்கிறது. அதனால் விலைவாசி உயர்கிறது.
சுங்கச் சாவடிகள் வாயிலாக வசூல் குவிந்தாலும், நெடுஞ்சாலைகளின் பராமரிப்பு திருப்திகரமாக இல்லை. தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில், 150 விபத்து பகுதிகள் அடையாளம் காணப்பட்டும், அவற்றை சீரமைக்கும் பணி நடக்கவில்லை.
சாலை விபத்து மற்றும் உயிரிழப்பில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
செலவு செய்ததற்கு மேல் வருமானம் கிடைத்துவிட்ட சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகள் காலாவதி ஆனதாக கருதி, அவற்றை மூட வேண்டும் என, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரிக்கு, தமிழக நெடுஞ்சாலை துறை அமைச்சர் வேலு கடிதம் எழுதினார்.
பார்லிமென்டிலும் சட்டசபையிலும் இப்பிரச்னை பலமுறை எதிரொலித்தது. சுங்கச் சாவடிகளை முற்றுகையிட்டு பல கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த சூழலில், தமிழகத்தில் எந்த சுங்கச் சாவடியும் காலாவதி ஆகவில்லை என்பதால், எதையும் மூட முடியாது என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.
நிதி தேவை
இது குறித்து, ஆணையத்தின் தமிழக பிரிவு அலுவலர் வீரேந்தர் சம்பியால் கூறியதாவது:
சாலை பராமரிப்பும், மேம்பாடும் முடிவே இல்லாமல் தொடர்ந்து நடக்கும் பணிகள். அவற்றுக்கு நிதி தேவைப்படுவதால், சுங்க வசூலை நிறுத்தும் கேள்விக்கே இடமில்லை.
நாடு முழுதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ஒரே மாதிரியான விதிகள் உள்ளன. அதன்படி, சுங்கச் சாவடிகளில் கட்டணம் குறைக்கப்படாது என, மார்ச் மாதமே மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.
தமிழகத்தில் சுங்கச் சாவடிகளை மூடவோ, கட்டணத்தை குறைக்கவோ எந்த திட்டமும் அரசிடம் இல்லை.இவ்வாறு சம்பியால் கூறினார்.