வள்ளுவருக்கு காவியடித்து திருட பார்க்கின்றனர் தமிழக முதல்வர் ஸ்டாலின் பேச்சு
வள்ளுவருக்கு காவியடித்து திருட பார்க்கின்றனர் தமிழக முதல்வர் ஸ்டாலின் பேச்சு
ADDED : ஜூலை 14, 2025 01:39 AM

சென்னை, ஜூலை 14-
''இன்றைக்கு வீரியத்துடன், அரசியல் பண்பாட்டு படையெடுப்பை எதிர்த்து கொண்டிருக்கிறோம். எத்தகைய படையெடுப்புகளையும் வெல்லும் திறன் தமிழுக்கு இருக்கிறது. வள்ளுவருக்கு சிலர் காவியடித்து திருடப் பார்க்கின்றனர்,'' என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
கவிஞர் வைரமுத்து எழுதிய, 'வள்ளுவர் மறை, வைரமுத்து உரை' நுால் வெளியீட்டு விழா, சென்னை தேனாம்பேட்டை, காமராஜர் அரங்கில் நேற்று நடந்தது. நுாலின் முதல் பிரதியை, முதல்வர் ஸ்டாலின் வெளியிட, முன்னாள் மத்திய அமைச்சரும், காங்., மூத்த தலைவருமான சிதம்பரம் பெற்றுக் கொண்டார்.
விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
திருக்குறள் இரண்டு அடி தான். ஆனால், 2,000ம் ஆண்டுகளுக்கு மேலாக, உலக மக்களுக்கு புதுவழியை நல்வழியை சொல்லக்கூடிய உலக இலக்கியமாக உயர்ந்து நிற்கிறது. அதனால் தான் ஏராளமானோர் உரை எழுதி உள்ளனர்; அந்த வரிசையில் வைரமுத்து இணைந்திருக்கிறார்.
வள்ளுவர் புலவர் மட்டுமல்ல; புரட்சியாளர்; கவிஞர் மட்டுமல்ல; கலகக்காரர். அவர் வழங்கியிருக்கும் வள்ளுவத்தை பரப்ப வேண்டியது நம் கடமை மட்டுமல்ல; காலத்தின் தேவை.
சொந்தம் கொண்டாட, ஆரியத்தில் ஆள் இல்லாத காரணத்தால், வள்ளுவருக்கு காவியடித்து திருடப் பார்க்கின்றனர். திருட என்பதை விட, ஏமாற்றப் பார்க்கின்றனர் என்பது தான் பொருத்தமாக இருக்கும்.
திருவள்ளுவரை அபகரிக்க நினைத்தால், அவரது கருத்துகளின் வெப்பமே, அவர்களை பொசுக்கிவிடும். திருக்குறளை படித்தால் மட்டும் போதாது; அதன்படி நடக்க வேண்டும் என்ற உணர்வை இளைஞர்களுக்கு ஊட்ட வேண்டும். இதற்காக, தி.மு.க., அரசு ஏராளமான முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது.
குறள் நீதி இருக்கும் இடத்தில், மனு நீதி தழைக்க முடியாது. அதற்கு வைரமுத்து உரை அடித்தளமாக அமையும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
மொழி வாழ்ந்தால் இனம் வாழும்; மொழி வீழ்ந்தால் இனம் வீழும். இது தான் உலக வரலாறு நமக்கு தந்திருக்கும் பாடம்.
இன்றைக்கு நாமும் வீரியத்துடன் அரசியல் பண்பாட்டு படையெடுப்பை எதிர்த்து கொண்டிருக்கிறோம். எத்தகைய படையெடுப்புகளையும் வெல்லும் திறன் தமிழுக்கு இருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் பேசுகையில், ''திருக்குறளுக்கு உரை என்பது புதிதல்ல. பரிமேலழகர், மு.வரதராசனார், கருணாநிதி என பலரும் உரை எழுதி உள்ளனர். திருக்குறள் அறநுால் மட்டுமல்ல; சமயம் சாராத அறநுால் என்ற தனிச்சிறப்பும் அதற்கு உண்டு.
''தத்துவ அறிஞர்கள் அரிஸ்டாட்டில், பிளாட்டோ ஆகியோரை விட, திருவள்ளுவர் மூத்தவர். தமிழ் மொழி பேசும், எழுதும், வாழும் மொழியாக உள்ளது.
''வைரமுத்து, அனைத்து குறள்களின் உரைகளுக்கும், தமிழ் மரபு சார்ந்து எழுதி உள்ளார். கடவுள் வாழ்த்து என்ற முதல் அதிகாரத்திற்கு, 'அறிவு வணக்கம்' என்ற தலைப்பிட்டு, தன் அடிப்படை நம்பிக்கையை விவரித்துள்ளார்,'' என்றார்.
முன்னாள் தலைமை செயலர் இறையன்பு, பேராசிரியை பர்வீன் சுல்தானா வாழ்த்துரை வழங்கினர்.