தமிழக முதல்வர் ஸ்டாலின் கோவை வருகை; பாதுகாப்பு பணியில் 3,500 போலீசார்
தமிழக முதல்வர் ஸ்டாலின் கோவை வருகை; பாதுகாப்பு பணியில் 3,500 போலீசார்
UPDATED : நவ 05, 2024 11:07 AM
ADDED : நவ 05, 2024 06:16 AM

கோவை: கோவையில் இன்றும் (நவ., 5), நாளையும் (நவ., 6) நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க, தமிழக முதல்வர் ஸ்டாலின் வந்தார். பாதுகாப்பு பணியில், 3,500 போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று (நவ., 5) காலை, 11:00 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவை வந்தார். 11:30 மணிக்கு பீளமேடு - விளாங்குறிச்சி சாலையில், 'எல்காட்' நிறுவனம் சார்பில் தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டல வளாகத்தில், 3.94 ஏக்கர் பரப்பளவில், 114.16 கோடி ரூபாயில், எட்டு தளங்களுடன் கட்டப்பட்டுள்ள புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா (டைடல் பார்க்) கட்டடத்தை திறந்து வைக்கிறார்.
மதியம், 12:00 மணிக்கு பீளமேடு சுகுணா கல்யாண மண்டபத்தில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் நில எடுப்பு நடவடிக்கையில் விலக்கு அளிக்கபட்ட நில உரிமையாளர்களுக்கு நில விடுவிப்பு உத்தரவு வழங்குகிறார். மாலை, 4:00 மணிக்கு கோவை செல்வபுரத்தில் உள்ள சிவாலயா திருமண மண்டபத்தில், தங்க நகை தொழில் அமைப்பு நிர்வாகிகளுடன் 'கிளஸ்டர்' அமைப்பது குறித்து கலந்துரையாடுகிறார்.
மாலை, 6:30 மணிக்கு போத்தனுார் பி.வி.ஜி., திருமண மண்டபத்தில் நடைபெறும் தி.மு.க., நிர்வாகிகளுடனான சிறப்பு கூட்டத்தில் உரை நிகழ்த்துகிறார். இரவு, 9:00 மணிக்கு அரசு விருந்தினர் மாளிகையில் முக்கிய வி.ஐ.பி.,க்களை சந்திக்கிறார்.
நாளை (நவ., 6) காலை, 10:00 மணிக்கு காந்திபுரம் நஞ்சப்பா சாலையில், 133.21 கோடி ரூபாயில் கட்டப்படும் செம்மொழி பூங்கா கட்டுமான பணியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்கிறார். தொடர்ந்து, 10:30 மணிக்கு பொதுப்பணித்துறை சார்பில், 300 கோடி ரூபாயில் ஏழு தளங்களுடன் கலைஞர் நுாற்றாண்டு நுாலகம் மற்றும் அறிவியல் மையத்துக்கு அடிக்கல் நட்டு பேசுகிறார்.
இந்நிகழ்ச்சிகளில், தமிழக அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, வேலு, தமிழக அரசின் தலைமைச் செயலர், முருகானந்தம், எம்.பி., ராஜ்குமார், கலெக்டர் கிராந்திகுமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
முதல்வர் வருகையையொட்டி, மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில் மாநகர போலீசார் 2,500 பேர், திருப்பூர், ஈரோடு உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.