தமிழக வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ. 26,000 கோடி தேவை:
தமிழக வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ. 26,000 கோடி தேவை:
ADDED : டிச 21, 2024 11:04 PM

சென்னை : 'தமிழக வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த, 26,000 கோடி ரூபாய் தேவை. அந்த தொகையை மத்திய பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும்' என, தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கோரிக்கை விடுத்துள்ளார்.
வரும் நிதியாண்டிற்கான மத்திய அரசின் பொது பட்ஜெட், 2025 பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கான முன்னோட்ட கூட்டம், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் நேற்று முன்தினம் நடந்தது.
அனைத்து மாநில நிதி அமைச்சர்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், தங்கம் தென்னரசு பேசியுள்ளதாவது:
நீண்ட காலமாக நிலுவையில் இருந்த, சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்ட பணிக்கு ஒப்புதல் அளித்ததற்கு மத்திய அரசுக்கு நன்றி.
மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்திற்காக, தமிழக பட்ஜெட்டில் இருந்து கடந்த மூன்று ஆண்டுகளில், 26,490 கோடி ரூபாய் செலவிடப்பட்ட காரணத்தால், மாநிலத்தின் நிதி நிலைமை மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது.
மாநிலத்தில் இதர வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்ள, மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நடப்பாண்டிற்கு 10,000 கோடி ரூபாயும், அடுத்த ஆண்டிற்கு 16,000 கோடி ரூபாயும் மத்திய பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும். மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கும் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
விடுவிக்கவில்லை
பல்வேறு திட்டங்களுக்கான நிதியை விடுவிப்பதில் மத்திய அரசு கடைப்பிடித்து வரும் கடுமையான கட்டுப்பாடுகளையும், கூடுதலான நிபந்தனைகளையும் நீக்க வேண்டும். அதற்கு பதில், மத்திய அரசு, மாநில அரசுகளுடன் இணைந்து, இத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.ஒருங்கிணைந்த கல்வி திட்டத்திற்கு, 2,152 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவிக்காமல் உள்ளது. இந்த நிதி, ஆசிரியர்கள் சம்பளம் உள்ளிட்ட பள்ளிகள் செயல்பாட்டிற்கு அவசியமானது.
இந்த நிதியை விடுவிக்காததால், மாநில அரசு முழு செலவையும் ஏற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.ஒப்புதல் அளிக்கப்பட்ட நிதியை, ஏனைய நிபந்தனைகளுடன் இணைக்காமல் உடனே விடுவிக்க வேண்டும். 44 லட்சம் மாணவர்கள், 2.20 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் 21,276 பணியாளர்களின் எதிர்காலம், மத்திய அரசு நடவடிக்கைகளையே சார்ந்துள்ளது.
சேதம்
தமிழகத்தில் சமீபத்தில், 'பெஞ்சல்' புயலால், 14 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன; மக்களின் உயிர், வாழ்வாதாரம், உள்கட்டமைப்புகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. எனவே, நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள, தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து, 6,675 கோடி ரூபாயை விடுவிக்க வேண்டும்.
மாநிலத்தின் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க, தொழில் பகுதிகளில் புதிய ரயில் தடங்கள் அமைக்க தேவை உள்ளது.வரும் மத்திய பட்ஜெட்டில், தாம்பரம் - செங்கல்பட்டு இடையே நான்காவது ரயில் பாதை, திருப்பத்துார் - கிருஷ்ணகிரி - ஓசூர் புதிய ரயில் பாதை, அருப்புக்கோட்டை வழியாக மதுரை - துாத்துக்குடி ரயில் பாதை, மீஞ்சூர் - திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் - சிங்கபெருமாள்கோவில் - மதுராந்தகம் ரயில் பாதை, சேலம் - ஓசூர் - கோவையை இணைக்கும் மிதவேக வழித்தட திட்டங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்.
தாம்பரம் - செங்கல்பட்டு இடையே உயர்மட்ட சாலையும், செங்கல்பட்டில் இருந்து திண்டிவனம் வரை தேசிய நெடுஞ்சாலை அமைக்கவும் முன்னுரிமை வழங்க வேண்டும்.
சென்னை - கன்னியாகுமரி வழித்தட திட்டத்திற்கு பட்ஜெட்டில் போதிய நிதியை ஒதுக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசியுள்ளார்.