தமிழகத்திற்கு நிதி ஒதுக்க மத்திய அரசுக்கு மனமில்லை
தமிழகத்திற்கு நிதி ஒதுக்க மத்திய அரசுக்கு மனமில்லை
UPDATED : ஜூலை 11, 2024 11:27 PM
ADDED : ஜூலை 11, 2024 11:24 PM

தர்மபுரி : ''தொடர் தோல்விக்கு பின்னரும், மத்திய அரசு பாடம் கற்றுக்கொள்ளவில்லை; தமிழக திட்டங்களுக்கு நிதி தர மறுக்கிறது,'' என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த பாளையம்புதுாரில் ஊரகப் பகுதிகளுக்கான, 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தை ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார். 2,637 பேருக்கு, 56 கோடி ரூபாய் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் வரவேற்றார். அமைச்சர் நேரு, கலெக்டர் சாந்தி முன்னிலை வகித்தனர்.
உறுதி அளித்தேன்
ஸ்டாலின் பேசியதாவது:
சட்டசபை தேர்தலுக்கு முன், ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று மக்களை சந்தித்தேன். 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற பெயரில் மக்களிடம் மனுக்கள் பெற்றேன். ஆட்சி அமைத்த 100 நாட்களில் சாத்தியமானவற்றை செய்வோம் என உறுதி அளித்தேன்.
'தி.மு.க., ஆட்சிக்கும் வராது; பெட்டியையும் திறக்காது' என, எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. ஆனால், மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்து, ஆட்சியில் அமர்த்தினர்.
உடனே, 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' என்ற துறையை உருவாக்கி, அதன் வாயிலாக, 2 லட்சத்து 29,216 மனுக்களுக்கு தீர்வு கண்டுள்ளோம். முதல்வரின் தனிப்பிரிவு, முதல்வர் உதவி மையம், ஒருங்கிணைந்த குறை தீர்க்கும் மேலாண்மை அமைப்பு இவற்றுடன், 'முதல்வரின் முகவரி' துறையை உருவாக்கி, இவற்றை ஒருங்கிணைத்து உள்ளோம்.
தீர்வு எவ்வளவு?
மக்கள் பிரதிநிதிகள் யாரிடம் மனு கொடுத்தாலும் ஒரே இடத்திற்கு வரும் வகையில் நடவடிக்கை எடுத்தோம். மக்களின் அனைத்து கோரிக்கைகளும் தலைமை செயலகத்திற்கு வந்து விடுகின்றன.
இந்த துறை வாயிலாக, 68 லட்சத்து 30,281 மனுக்கள் பெறப்பட்டு, 66 லட்சத்து 25,3௦4 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் 72,438 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
அரசு அலுவலர்களை பொதுமக்கள் சந்திப்பதில் உள்ள சிரமத்தை உணர்ந்து, அதிகாரிகளே மக்களிடம் சென்று மனு வாங்குவது தான், 'மக்களுடன் முதல்வர்' திட்டம்.
நகர்ப்புறங்களில் செயல்படுத்திய இத்திட்டம், இரண்டாம் கட்டமாக இன்று ஊரகப் பகுதிகளிலும் துவக்கப்படுகிறது. 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம்கள் வாயிலாக இதுவரை, 8.74 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
எரிச்சல்
சொல்வதை மட்டுமல்ல; சொல்லாததையும் செய்து வருகிறோம். இது, எதிர்க்கட்சிகளுக்கு பொறாமையையும், எரிச்சலையும் ஏற்படுத்துகிறது. எங்கள் மீது அவதுாறு பேசி, ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த முயல்கின்றனர். தொடர் தோல்விக்கு பின்னரும், மத்திய அரசு பாடம் கற்றுக்கொள்ளவில்லை.
தமிழக திட்டங்களுக்கு நிதி வழங்க இன்னும் அதற்கு மனம் வரவில்லை. நல்ல குணம் வரவில்லை. ஒப்புக் கொள்ளப்பட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதியை கூட தர மறுக்கிறது. இனியாவது யார் மீதும் விருப்பு, வெறுப்பின்றி மத்திய அரசு செயல்பட வேண்டும்.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
பா.ம.க., கவுரவ தலைவர் ஜி.கே.மணி, தர்மபுரி எம்.எல்.ஏ., வெங்கடேஸ்வரன், தர்மபுரி எம்.பி., மணி, தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்றனர்.

