வரைவு வாக்காளர் பட்டியல் ரிலீஸ்: தமிழகத்தில் 97 லட்சத்து 37 ஆயிரம் பேர் நீக்கம்!
வரைவு வாக்காளர் பட்டியல் ரிலீஸ்: தமிழகத்தில் 97 லட்சத்து 37 ஆயிரம் பேர் நீக்கம்!
UPDATED : டிச 19, 2025 06:44 PM
ADDED : டிச 19, 2025 05:02 PM

சென்னை: எஸ்ஐஆர் பணிக்கு பிறகு தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், 97,37,832 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். அதில் அதிகபட்சமாக சென்னையில் 14,25,018 பேர் நீக்கப்பட்டனர்.
தமிழகத்தில், 2026 ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதையொட்டி, எஸ்.ஐ.ஆர்., எனப்படும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணியை, இந்திய தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது. இதன் முதல் கட்டமாக, வாக்காளர் கணக்கெடுப்பு பணிகள், நவம்பர் 4ம் தேதி துவங்கின.
இதற்காக, தமிழகத்தில் உள்ள, 6.41 கோடி வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவங்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது.பூர்த்தி செய்யப்பட்டு, திரும்ப பெறப்பட்ட படிவங்கள், தேர்தல் கமிஷனின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன.தமிழகத்தில் இப்பணிகள், 100 சதவீதம் முடிந்துள்ளதாக, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இதை தொடர்ந்து, இன்று மாநிலம் முழுதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
சென்னையில் நிருபர்களை சந்தித்த தலைமை தேர்தல் கமிஷனர் அர்ச்சனா பட்நாயக் நிருபர்களிடம் கூறியதாவது: மாநிலம் முழுவதும் சேர்த்து மொத்தம் 97 லட்சத்து 37 ஆயிரத்து 832 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர்., பணி தொடங்கும் முன் 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 பேர் வாக்காளர்களாக இருந்தனர். எஸ்.ஐ.ஆர்., முடிவில், 5 கோடியே 43 லட்சத்து 76 ஆயிரத்து 755 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.97 லட்சத்து 37 ஆயிரத்து 832 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
வரைவு வாக்காளர் பட்டியலின்படி,
ஆண் வாக்காளர்கள் - 2 கோடியே 66 லட்சத்து 63 ஆயிரத்து 233 பேர்
பெண் வாக்காளர்கள் - 2 கோடியே 77 லட்சத்து 06 ஆயிரத்து 333 பேர்
3ம் பாலினத்தவர்கள்- 7 ஆயிரத்து 191 பேர்
மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை -- 4 லட்சத்து 19 ஆயிரத்து 355 பேர்
ஓட்டுச்சாவடி அலுவலர்கள் நேரடியாக சென்று 3 முறை விசாரணை மேற்கொண்டும் கண்டறிய முடியாதவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், இறப்பு, பலஇடங்களில் பதிவு செய்தவர்கள் பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை.
நீக்கப்பட்டவர்கள் யார்?
இறந்த வாக்காளர்கள்: 26 லட்சத்து 94 ஆயிரத்து 672 பேர்
இடம்பெயர்ந்தவர்கள்: 66 லட்சத்து 44 ஆயிரத்து 881 பேர்
இரட்டை பதிவுகள்: 3 லட்சத்து 39 ஆயிரத்து 278 பேர்
2 வாரம் சிறப்பு முகாம் நடக்கும். அப்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம் வழங்கலாம். வரைவு வாக்காளர் பட்டியலில் இல்லாதவர்கள் ஓட்டுச்சாவடி அலுவலர்களை அலுவலம் படிவம் 6 ஐ பூர்த்தி செய்து கொடுக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட வாரியாக நீக்கப்பட்ட வாக்காளர்கள் விவரம்
சென்னை -14.25 லட்சம்
காஞ்சிபுரம் -2.74 லட்சம்
செங்கல்பட்டு- 7,01 லட்சம்
திருவள்ளூர் -6.19 லட்சம்
மதுரை -3.80 லட்சம்
சிவகங்கை -1.5 லட்சம்
ராமநாதபுரம் -1.17 லட்சம்
தேனி -1.25 லட்சம்
திண்டுக்கல்- 3.24 லட்சம்
விருதுநகர் - 1.89 லட்சம்
கோவை -6.50 லட்சம்
திருப்பூர் -5.63 லட்சம்
நீலகிரி - 56,091
ஈரோடு -3.25 லட்சம்
கன்னியாகுமரி -1.53 லட்சம்
கடலூர் -2.46 லட்சம்
விழுப்புரம் -1.82 லட்சம்
கள்ளக்குறிச்சி -84,329
திருநெல்வேலி-2.16 லட்சம்
தென்காசி -1.51 லட்சம்
தூத்துக்குடி -1.62 லட்சம்
சேலம் -3.62 லட்சம்
கிருஷ்ணகிரி -1.74 லட்சம்
நாமக்கல் -1.93 லட்சம்
திருச்சி -3.31 லட்சம்
அரியலூர் -24,368
கரூர் - 79,690
பெரம்பலூர்- 49,548
மயிலாடுதுறை-75,378
நாகப்பட்டினம் -57,338
தஞ்சாவூர் -2.06 லட்சம்
புதுக்கோட்டை-1.39 லட்சம்
வேலூர் -2.15 லட்சம்
ராணிப்பேட்டை -1.45 லட்சம்
திருப்பத்தூர் -1.16 லட்சம்
தர்மபுரி -81,515
திருவாரூர் -1.29 லட்சம்
திருவண்ணாமலை -2.52 லட்சம் வாக்காளர்கள் எஸ்ஐஆர்க்கு பின் நீக்கப்பட்டுள்ளனர்.
முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் 1,03,812 ஓட்டுக்களும், எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் தொகுதியான எடப்பாடியில் 26,375 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
எஸ்.ஐ.ஆர்., கணக்கெடுப்பு பணிக்கு, தி.மு.க., தலைமை எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், அந்த கட்சியினர்தான் கணக்கெடுப்பு பணியில் முழுமையாக பங்கேற்றனர். அ.தி.மு.க., தரப்பில், பெரிதாக எந்த முன்னெடுப்புகளையும் செய்யவில்லை.
முடிவில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி மாதம் வெளியிடும் வரை, புதிய வாக்காளர்கள் சேர்ப்பு பணியில், தமிழக கட்சிகள் ஆர்வம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

