ADDED : அக் 04, 2024 09:54 PM
சென்னை:மின் வாரியத்தில், மிக முக்கிய பதவியாக கருதப்படும் ஆறு பிரிவு இயக்குனர் பதவிகள், நான்கு மாதங்களாக காலியாக உள்ளன.
மின் உற்பத்தி கழகம், பசுமை எரிசக்தி கழகம், மின் பகிர்மான கழகம், மின் தொடரமைப்பு கழகம் ஆகிய நிறுவனங்களாக, தமிழக மின் வாரியம் செயல்படுகிறது.
அவற்றில் மின் உற்பத்தி, மின் பகிர்மானம், மின் இயக்கம், நிதி, மின் திட்டங்கள் போன்ற பிரிவுகள், இயக்குனர்களின் கீழ் செயல்படுகின்றன.
மின் தொடரமைப்பு கழகத்தில் மேலாண் இயக்குனர், இயக்குனர் பதவிகள் உள்ளன. இந்த பதவிக்கு, காலியிடங்களுக்கு ஏற்ப தலைமை பொறியாளராக இருப்பவரில் திறமை மற்றும் நேர்மையான நபரை, இயக்குனராக அரசு நியமிக்கும்.
மின் இயக்க இயக்குனர், தொடரமைப்பு மேலாண் இயக்குனராக இருந்த அதிகாரிகள், மார்ச்சிலும், மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான இயக்குனர்களாக இருந்தவர்கள், ஏப்ரலிலும் ஓய்வு பெற்றனர்.
மின் திட்டங்கள் இயக்குனராக இருந்தவர் ஜூனிலும், தொடரமைப்பு கழக இயக்குனராக இருந்தவர் ஜூலையிலும் ஓய்வு பெற்றார். அந்த பதவிகளை, சில தலைமை பொறியாளர்கள், கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகின்றனர்.
இந்தாண்டு துவக்கத்தில் புதிதாக துவக்கப்பட்ட பசுமை எரிசக்தி கழகத்திற்கும், மின் உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப பிரிவுக்கும் இயக்குனர்களை நியமிக்க, அரசு ஒப்புதல் அளித்தது. இதனுடன் சேர்த்து, எட்டு இயக்குனர்கள் பதவிகள் காலியாக உள்ளன.
இம்மாத இறுதியில் மழைக்காலம் துவங்க உள்ள நிலையில், மின் வாரிய தலைவராக இருந்த ராஜேஷ் லக்கானியை, வருவாய் நிர்வாக ஆணையராக, அரசு கடந்த 2ம் தேதி இடமாற்றம் செய்தது.
மின் வாரியத்தில் முக்கிய பதவிகள் அனைத்தும் காலியாக இருப்பதால், பணிகள் பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது.