கிருஷ்ணசாமிக்கு அரிவாள் பார்சல் தமிழக விவசாயிகள் சங்கம் சவால்
கிருஷ்ணசாமிக்கு அரிவாள் பார்சல் தமிழக விவசாயிகள் சங்கம் சவால்
ADDED : ஜூன் 22, 2025 01:28 AM

பல்லடம் : “அரிவாள் அனுப்பி வைக்கிறோம்; தைரியம் இருந்தால் பானைகளை உடைக்க வாருங்கள்,” என, புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமிக்கு, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சவால் விடுத்துள்ளது.
இதன் மாநில ஊடகப்பிரிவு செயலர் ஈஸ்வரன் கூறியதாவது:
தமிழகத்தில், 'கள்' இறக்க அனுமதி கோரி, 38 ஆண்டுகளாக போராடி வருகிறோம். இந்த சூழலில், புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி, வன்முறையை துாண்டும் விதமாக, 'கள்' குறித்து, தொடர்ந்து தவறான கருத்துகளை கூறி வருகிறார். 'கள் விஷம்' என்றும் 'தமிழகத்தில், எங்கு கள் இறக்கினாலும், 100 பேர் அரிவாளோடு வருவோம்' என்றும் விவசாயிகளுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
தென்னை, பனை விவசாயிகளின் நியாயமான போராட்டத்தை, கிருஷ்ணசாமி கொச்சைப்படுத்தி வருகிறார். இதேபோல் தொடர்ந்து பேசினால், வீதியில் நடமாட விடமாட்டோம். கிருஷ்ணசாமிக்கு, அரிவாளை பார்சலில் அனுப்பி வைக்கிறோம்; தைரியம் இருந்தால், தென்னை மற்றும் பனை விவசாயிகளின் தோட்டத்துக்கு பானையை உடைக்க வரட்டும் என சவால் விடுகிறோம்.
உண்மையிலேயே அவர் அரசியல் செய்ய வேண்டும் என்றால், ஆட்சிக்கு வந்ததும் மதுக்கடைகளை மூடுவேன் என்று கூறிய தி.மு.க., அரசை எதிர்த்துப் போராடி இருக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.