குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரத்தில் ஹாரன் அடிக்க, பட்டாசு வெடிக்க தடை தமிழக அரசு அறிவிப்பு
குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரத்தில் ஹாரன் அடிக்க, பட்டாசு வெடிக்க தடை தமிழக அரசு அறிவிப்பு
ADDED : ஜன 31, 2025 12:28 AM
சென்னை:'குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரங்களில் ஹாரன் அடித்தால், பட்டாசு வெடித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் ஒலி மாசுபாட்டை கட்டுப்படுத்த, அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பாக, தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை வெளியிட்ட அரசாணை:
தொழிற்சாலை பகுதிகளில் காலை 6:00 முதல் இரவு 10:00 மணி வரை 75 டெசிபல்; இரவு 10:00 முதல் காலை 6:00 மணி வரை 70 டெசிபல்; வணிகப் பகுதிகளில் பகலில் 65 டெசிபல், இரவில் 55 டெசிபல்; குடியிருப்பு பகுதிகளில் பகலில் 55 டெசிபல், இரவில் 45 டெசிபல்; மருத்துவமனைகள், பள்ளிகள் உள்ள அமைதி மண்டலம் என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளில், பகலில் 50 டெசிபல், இரவில் 40 டெசிபல் தான் ஒலியின் அளவு இருக்க வேண்டும்.
அதை மீறி, ஒலி மாசு ஏற்படுத்துவோர் மீது, கலெக்டர்கள், எஸ்.பி.,க்கள், மாநகர போலீஸ் கமிஷனர்கள், டி.எஸ்.பி.,க்கள், சப் - -கலெக்டர்கள், ஆர்.டி.ஓ.,க்கள் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் உடையவர்கள்.
குறிப்பிட்ட மண்டலங்களில் ஒலி மாசை நிர்ணயிக்கப்பட்ட அளவில் வைத்திருப்பது, அந்தந்த அதிகாரி களின் பொறுப்பு.
குடியிருப்பு பகுதிகள், அமைதி மண்டலமாக நிர்ணயிக்கப்பட்ட பகுதிகளில், அவசர காலங்கள் தவிர, இரவு நேரங்களில் ஹாரன் அடிக்கக்கூடாது; பட்டாசு வெடித்தல் கூடாது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எழுத்துப்பூர்வ அனுமதி பெறாமல் ஒலிபெருக்கி உள்ளிட்ட அதிக ஒலி எழுப்பும் கருவிகளை பயன்படுத்தக்கூடாது.
அவசர காலங்கள் தவிர, இரவு நேரங்களில் பொதுவெளியில் ஒலிபெருக்கி, இசைக்கருவிகள் இசைப்பது, 'ஆம்ப்ளிபையர்'களை பயன்படுத்துவது கூடாது.
குடியிருப்பு பகுதிகள், அமைதி மண்டலங்களில் கட்டுமானப் பணிகளின் போது, இரவு அதிக ஒலி எழுப்பும் கருவிகளை பயன்படுத்தக் கூடாது.
இந்த விதிமுறைகள் பின்பற்றப்படுவதை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து, மீறுவோர் மீது சட்டப் படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.