11,698 பேர் மீதான வழக்கு ரத்து: தமிழக அரசு அறிவிப்பு
11,698 பேர் மீதான வழக்கு ரத்து: தமிழக அரசு அறிவிப்பு
ADDED : ஜன 27, 2025 01:22 AM

சென்னை: டங்ஸ்டன் போராட்டம் தொடர்பாக 11,698 பேர் மீது போடப்பட்ட நான்கு குற்ற வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக, தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
மதுரை மாவட்டம், மேலுார் அடுத்த அரிட்டாபட்டி கிராமத்தை சுற்றியுள்ளப் பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க, மத்திய அரசு உரிமை வழங்கியதை எதிர்த்து, அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர்.
தமிழக அரசு பலமுறை எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட, இந்த திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது.
இந்த திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் எனப் பிரதமரை வலியுறுத்தி, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
இந்த திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என, ஒரு மனதாக தமிழக சட்டசபையில், சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மக்களின் உணர்வுக்கும் தமிழக அரசின் உறுதிக்கும் கிடைத்த வெற்றியாக, இந்த திட்டத்தை மத்திய அரசு கைவிட்டுள்ளது. டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை எதிர்த்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது, காவல் துறையினரால் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்ப பெறப்படும் என, முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்தார்.
அதன்படி போராட்டத்தில் ஈடுபட்ட 11,698 பேர் மீது மதுரை தல்லாகுளம் மற்றும் மேலுார் காவல் நிலையங்களில் பாரதிய நியாய சங்கீதா சட்டம் 2023ன் கீழ், மூன்று பிரிவுகளில் பதிவு செய்யப்பட்ட, நான்கு குற்ற வழக்குகளும் திரும்ப பெறப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

