ADDED : அக் 07, 2025 06:51 AM

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.
ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை 5ல் சென்னையில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், 27 பேருக்கும் மேல் கைது செய்யப்பட்டு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், 'வழக்கு விசாரணையை தமிழக போலீஸ் நியாயமாக மேற்கொள்ளவில்லை. எனவே, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும்' என கோரி, ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் இமானுவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்ற உத்தரவிட்டது. மேலும், வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் உடனடியாக சி.பி.ஐ., வசம் ஒப்படைக்கும்படி தமிழக போலீசுக்கு உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.
- டில்லி சிறப்பு நிருபர் -