மின் வாரியத்தில் 10,200 பேர் நியமனம் இறுதி கட்டத்தில் தமிழக அரசு அனுமதி
மின் வாரியத்தில் 10,200 பேர் நியமனம் இறுதி கட்டத்தில் தமிழக அரசு அனுமதி
ADDED : ஜன 08, 2025 01:40 AM
சென்னை:மின்வாரியத்தில் பல்வேறு பதவிகளுக்கு, 10,200 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்காக அரசின் அனுமதி பெறும் பணி இறுதி கட்டத்தில் இருப்பதாக, தொழிற்சங்க நிர்வாகிகளிடம் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழக மின் வாரியத்தில், உதவி பொறியாளர், கள உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில், 1.42 லட்சம் பணியிடங்களுக்கு, தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த 2024 மார்ச் நிலவரப்படி, 82,384 பேர் பணிபுரியும் நிலையில், 59,824 காலியிடங்கள் உள்ளன. இதனால் ஒருவரே, இரண்டு, மூன்று நபர்களின் வேலைகளை செய்வதால், அதிக பணிச்சுமை உள்ளது.
எனவே, காலியிடங்களை நிரப்புமாறு அனைத்து தொழிற்சங்கங்களும், மின் வாரியத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதையடுத்து, பல்வேறு பதவிகளில், 10,200 பேரை தேர்வு செய்ய, 2022 ஆகஸ்டில் தமிழக அரசிடம் மின் வாரியம் அனுமதி கேட்டது.
இதற்கு, அரசு மற்றும் மின் வாரியம் கடும் நிதி நெருக்கடியில் இருப்பதால், அனுமதி அளிக்கப்படாமல் இருந்து வந்தது.
இதுகுறித்து, மின் வாரிய தொழிலாளர், பொறியாளர் ஐக்கிய சங்க பொதுச் செயலர் சுப்ரமணியன் கூறியதாவது:
கள உதவியாளர், கம்பியாளர் பதவிகளில் மட்டும், 30,000க்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன. தற்போது பணியில் உள்ளவர்கள், 3 கோடிக்கும் அதிகமான நுகர்வோர்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்கும் பணியில் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
பணிச்சுமையால் ஊழியர்கள் மின் விபத்துகளிலும் சிக்குகின்றனர். ஊழியர்கள் நியமனத்திற்கு அரசு, இரு ஆண்டுகளாக ஒப்புதல் அளிக்காமல் இருந்தது.
இதுகுறித்து, மின்துறை அமைச்சர், மின் வாரிய தலைவரை சந்தித்து பேசினோம்.
அவர்கள், 10,200 பேரை நியமனம் செய்வதற்கான அரசின் அனுமதி இறுதி கட்டத்தை எட்டி இருப்பதாக தெரிவித்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

