கோவில்களில் நாளை சிறப்பு பூஜைக்கு தமிழக அரசு... தடை!
கோவில்களில் நாளை சிறப்பு பூஜைக்கு தமிழக அரசு... தடை!
ADDED : ஜன 21, 2024 02:47 AM

அயோத்தியில் நாளை ராமர் கோவில் கும்பாபிேஷகம் நடக்க உள்ள நிலையில், அதை முன்னிட்டு தமிழக கோவில்களில் அன்னதானம் மற்றும் சிறப்பு பூஜை நடத்தக்கூடாது என, தமிழக அரசு தடை விதித்து வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது, தமிழகம் முழுவதும் பக்தர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய பண்டிகைகளின் போது, அந்தந்த பகுதியில் உள்ள பக்தர்கள், ஹிந்து அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் தங்கள் சொந்த செலவில் கோவிலில் அன்னதானம் வழங்குவது வழக்கம்; சிறப்பு பூஜைகளும் செய்யப்படும்.
அவசர உத்தரவு
கட்சி பாகுபாடு இல்லாமல் அனைவரும் இந்த வழக்கத்தை பின்பற்றுகின்றனர். திருமணம், பிறந்தநாள் போன்ற சந்தர்ப்பங்களிலும் பக்தர்கள் அன்னதானம் வழங்குவது வாடிக்கை.
நாளை அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்படுவதை ஒட்டி நாடே விழாக்கோலம் பூண்டுள்ள நிலையில், தமிழக கோவில்களிலும் பக்தர்கள் மற்றும் அமைப்புகள் சார்பில் சிறப்பு பூஜைகள் நடத்தி அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், அதற்கு தடை விதித்து தமிழக அரசு அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது.
'அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு தமிழக கோவில்களில் சிறப்பு பூஜை, அன்னதானம் வழங்குதல், அது சார்ந்த நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தக்கூடாது.
'கோவில் நிர்வாகம் சார்பிலோ பக்தர்கள் பெயரிலோ அமைப்புகள், கட்சிகள் பெயரிலோ எந்த நிகழ்ச்சியும் நடத்தக் கூடாது. அதை விளம்பரப்படுத்தி பேனர் வைக்கக் கூடாது. மீறி அன்னதானம் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிகள் நடந்தாலும், சம்பந்தப்பட்ட கோவில் செயல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என வாய்மொழியாக எச்சரிக்கப் பட்டுள்ளது.
அதிர்ச்சி
ஒட்டு மொத்த நாடே அயோத்தி விழாவை எதிர்பார்த்து காத்திருக்கும் நேரத்தில், தமிழக அரசின் ஹிந்து சமய அறநிலையத்துறை இப்படி தடை விதித்து இருப்பது, பக்தர்களை மட்டுமின்றி கோவில் நிர்வாகிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்திஉள்ளது.
அயோத்தி விழாவின் நேரடி ஒளிபரப்பை பெரிய திரை வாயிலாக பொது இடங்களில் மக்களுக்கு காட்ட ஏற்பாடு செய்வதையும் போலீசார் தடுப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
'கோவில்களில் சிறப்பு பூஜை செய்யக்கூடாது என சொல்கிற அதிகாரம், தமிழக அரசுக்கு எந்த சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது என விளக்க வேண்டும். மக்களின் பிறந்தநாள், திருமணநாள் போன்றவற்றுக்கே விசேஷ பூஜை நடத்தப்படும் சூழலில், வரலாற்று சிறப்பு மிக்க நாளில் ராமருக்கு பூஜை செய்வதை தடுக்கும் உரிமை எந்த அரசுக்கும் இல்லை. தடுத்தால், தடையை மீறி சிறப்பு பூஜை நடத்தப்படும்' என பா.ஜ., நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.
- நமது நிருபர் குழு -

