தேர்தல் வாக்குறுதி நிறைவேற்ற கோரி தமிழக அரசு ஊழியர்கள் போராட்டம்
தேர்தல் வாக்குறுதி நிறைவேற்ற கோரி தமிழக அரசு ஊழியர்கள் போராட்டம்
ADDED : டிச 05, 2025 05:59 AM

சென்னை: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க., அரசை கண்டித்து, அரசு ஊழியர்கள் நேற்று மாநிலம் முழுதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பழைய ஓய்வூதிய திட்டம் உட்பட, தி.மு.க., அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை, அரசு இன்னும் நிறைவேற்றவில்லை. இதனால், அதிருப்தி அடைந்துள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வாயிலாக, மாநிலம் முழுதும் நேற்று, மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடந்தது. சென்னை எழிலகம் வளாகத்தில் திரண்ட அரசு ஊழியர்கள் நுாற்றுக்கும் மேற்பட்டோர், திடீரென காமராஜர் சாலையில் அமர்ந்து, மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார், அரசு ஊழியர்களை அப்புறப்படுத்தினர். திருவல்லிக்கேணியில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்ட அரசு ஊழியர்கள், மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
வேலுார் சத்துவாச்சாரி கலெக்டர் அலுவலகம் அருகே அரசு ஊழியர் சங்கத்தினர் மறியல் செய்தனர். அங்கு, போலீசாருக்கு இடையூறு செய்யாமல் அவர்களாகவே கைதாகி பேருந்தில் ஏறி சென்றனர்.
இதற்கிடையே, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான ஓய்வூதிய திட்டம் குறித்த இடைக்கால அறிக்கையை வெளியிடாத தமிழக அரசை கண்டித்து, 2026 ஜன., 6 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய போவதாக, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில பொருளாளர் எம்.விஜயபாஸ்கர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

