சிறைத்துறையில் 'ஆர்டர்லி' முறை ஒழிப்பு உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
சிறைத்துறையில் 'ஆர்டர்லி' முறை ஒழிப்பு உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
ADDED : ஜன 31, 2025 02:31 AM
சென்னை:'சீருடை பணியாளர்களை, சிறை அதிகாரிகளின் வீட்டு வேலைகளுக்கு ஈடுபடுத்தும், 'ஆர்டர்லி' முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் விக்னேஷ்வர் பெருமாள்; கடந்த ஆண்டு ஏப்ரலில் குற்ற வழக்கில் கைதாகி, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இவரது மனைவி சுஜாதா, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், 'ஒரு அறையில் அதிக எண்ணிக்கையில் கைதிகளை அடைத்து வைத்துள்ளனர். போதிய கழிப்பறை வசதிகள் இல்லை. இதே நிலை நீடித்தால், சிறைவாசிகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.
என் கணவர் தொடர்ந்து அந்த சிறையில் இருந்தால், உயிருக்கு ஆபத்து ஏற்படும். அவரை சிறைக்குள், குறைவான நபர்கள் இருக்கும் பகுதிக்கு மாற்றக்கோரி மனு அளித்தேன். அதை பரிசீலிக்கவில்லை. மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்' என்று, குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 'உளவுத்துறையினரிடம் தகவல் பெற்று விரிவான விசாரணை நடத்தி, சீருடை பணியாளர்களை வீட்டு வேலையில் ஈடுபடுத்தும் அதிகாரிகளுக்கு எதிராக, உள்துறை முதன்மை செயலர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று உத்தரவிட்டது.
இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அடங்கிய அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில், உள்துறை செயலரின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன் விபரம்:
உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, மாநிலம் முழுதும் சிறைகளில் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணை முடிவில், சிறை அதிகாரிகளின் வீடுகளில், சீருடை பணியாளர்கள் ஆர்டர்லிகளாக பயன்படுத்தப்படவில்லை என்பது தெரியவந்தது. ஒரு சில அதிகாரிகளின் வீடுகளில், ஆர்டர்லிகளாக இருந்த சீருடை பணியாளர்களும், நீதிமன்ற உத்தரவுக்கு பின், அதிலிருந்து விடுவிக்கப்பட்டு விட்டனர்.
வேலுாரில் தண்டனை கைதியை துன்புறுத்திய விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதான விசாரணை நடந்து வருகிறது. ஆர்டர்லி முறை குறித்து எதிர்காலத்தில் புகார் வந்தால், அது தொடர்பாக உடனே நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதை பதிவு செய்த நீதிபதிகள், ஆர்டர்லி முறையை ஒழிக்க விரைவாக நடவடிக்கை எடுத்த, தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்து, சிறைத்துறையில் ஆர்டர்லி முறை ஒழிக்கப்பட்டது போல, காவல் துறையிலும் ஆர்டர்லி முறை ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.