வழக்குகளில் சாட்சியாக உள்ள குழந்தைகளை உளவியல் ரீதியாக பாதுகாக்க வழிகாட்டுதல் உருவாக்க குழு
வழக்குகளில் சாட்சியாக உள்ள குழந்தைகளை உளவியல் ரீதியாக பாதுகாக்க வழிகாட்டுதல் உருவாக்க குழு
UPDATED : ஆக 24, 2025 03:20 AM
ADDED : ஆக 23, 2025 10:43 PM

சென்னை:'கொடுங்குற்ற வழக்குகளில் சாட்சிகளாக உள்ள குழந்தைகளை, உளவியல் ரீதியாக பாதுகாப்பது தொடர்பான வழிகாட்டுதல்களை வகுக்க, பல்வேறு துறைகள் அடங்கிய குழு அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கோவை மாவட்டத்தில், தன் சகோதரியை, அவரது எட்டு வயது மகள் கண் எதிரே துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த வழக்கில், சகோதரர் சரவணகுமார் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
மேல்முறையீடு அதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், அவர் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வில் விசாரணையில் உள்ளது.
மேல்முறையீடு செய்தவர் தரப்பில், மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார் ராஜரத்தினம் ஆஜராகி, ''கொடுங்குற்றங்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகளை கையாள, பல வழிகாட்டுதல்கள் இருந்தாலும், அத்தகைய குற்றங்களில் சாட்சிகளான குழந்தைகளின் நலன்களை பாதுகாக்க, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை,'' என்றார்.
இதையடுத்து, 'இந்த வழக்கில் முக்கிய சாட்சியான எட்டு வயது குழந்தையின் சாட்சியம் அடிப்படையில், சரவணகுமாருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
'தாய் கொடூரமாக கொலையானதை நேரில் பார்த்த குழந்தையின் மன நிலையை கருத்தில் கொண்டு, இதுபோன்ற கொடும் குற்ற வழக்குகளில் சாட்சிகளாக சேர்க்கப்படும் குழந்தைகளுக்கு, 'கவுன்சிலிங்' வழங்குவதற்கு உரிய விதிமுறைகளை, அரசு வகுக்க வேண்டும்' என, நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு முன், மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, காவல் துறை தரப்பில், தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி வாதாடியதாவது:
தமிழகம் முழுதும், 2020 ஜனவரி முதல், 2025 ஜூலை வரை, 161 குற்ற வழக்குகளில் குழந்தைகள் சாட்சிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.
கொடுங்குற்ற வழக்குகளில் சாட்சிகளாக உள்ள குழந்தைகளின் மன நலனை கண்டறியவும், அவர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்கவும், காவல் துறை மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கான வழிகாட்டு விதிமுறைகளை வகுக்க, அரசு நடவடிக்கை எடுத்து உ ள்ளது.
பாதுகாப்பு
இதுதொடர்பாக, உள்துறை செயலர் தலைமையில், கடந்த 20ம் தேதி சமூக நலத்துறை செயலர், பெண்கள் மற்றும் குழந்தை களுக்கு எதிரான குற்றப்பிரிவு ஐ.ஜி., மனநல மருத்துவமனை இயக்குநர், சட்டத் துறை கூடுதல் செயலர் ஆகியோர் கலந்து கொண்ட கூட்டம், தலைமை செயலகத்தில் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில், பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
இறுதியாக, கொடுங்குற்ற வழக்குகளில் சாட்சிகளாக உள்ள குழந்தைகளை, உளவியல் ரீதியாக பாதுகாப்பது தொடர்பாக வழிகாட்டுதல்கள் வகுக்க, சட்டம், காவல், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகள் அடங்கிய குழு அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் வாதாடினார்.
அதைத் தொடர்ந்து, கூட்ட நிகழ்ச்சி நிரல், அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த விபரங்களை தாக்கல் செய்தார்.
இதை பார்வையிட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் அரசு எடுத்துள்ள முயற்சிக்கு பாராட்டு தெரிவித்து, விரைவாக வழிகாட்டுதலை உருவாக்க நடவடிக்கை எடுக்குமாறு கூறி, வழக்கு விசாரணையை, வரும் 29ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.