ADDED : ஏப் 17, 2025 01:05 AM

சென்னை:'அரசாணைகளை தமிழிலேயே வெளியிட வேண்டும்' என, அனைத்து துறை செயலர்கள், மாவட்ட கலெக்டர்களுக்கு, தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் சாமிநாதன் அறிவுரைபடி, அத்துறையின் செயலர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
தேசிய கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கையை வலியுறுத்துகிறது. 'தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை அமலில் உள்ளதால், தேசிய கல்விக் கொள்கையை ஏற்க இயலாது' என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இம்மாதம் 6ம் தேதி ராமேஸ்வரம் வந்த பிரதமர், பாம்பன் ரயில் பாலம் திறப்பு விழாவில் பேசும் போது, 'தமிழக அரசு சார்பில், முதல்வர், அமைச்சர்கள் எழுதும் கடிதங்களில், தாய் மொழியான தமிழில் கையெழுத்திடாமல், ஆங்கிலத்தில் கையெழுத்திடுகின்றனர்' என்றார்.
தாய் மொழியான தமிழுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக கூறும் தி.மு.க., அரசே, தமிழை புறக்கணிக்கலாமா என தமிழ் ஆர்வலர்கள் கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில், தமிழ் வளர்ச்சி துறை செயலர் ராஜாராமன், அனைத்து துறை செயலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
தமிழ் ஆட்சி மொழி சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் வகையில், தமிழில் அரசாணைகள் வெளியிடுவது குறித்து, ஏற்கனவே உத்தரவுகள் வெளியிடப்பட்டு உள்ளன.
அவற்றை பின்பற்றி, அனைத்து அரசாணைகளும், சுற்றாணைகள் எனும் சுற்றறிக்கைகளும், தமிழில் மட்டுமே வெளியிடப்பட வேண்டும்.
அதேபோல, துறை தலைமை அலுவலகங்களில் இருந்து, பிற அலுவலகங்களுக்கு அனுப்பும் கருத்துரைகள், கடிதங்கள், அலுவலக உத்தரவுகள் உள்ளிட்ட கடிதப் போக்குவரத்துகளும் தமிழில் தான் இருக்க வேண்டும்.
பொது மக்களிடம் இருந்து தமிழில் வரும் கடிதங்களுக்கு, தமிழில் தான் பதில் எழுத வேண்டும். அரசு பணியாளர்கள் அனைவரும் தமிழில் மட்டுமே கையொப்பமிட வேண்டும்.
மேலும், ஆங்கிலத்தில் வெளியிட விலக்கு அளிக்கப்பட்டு, தலைமை செயலக துறைகளால் ஆங்கிலத்தில் வெளியிடப்படும் அரசாணைகளை தமிழில் மாற்ற, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையின் மொழிபெயர்ப்பு பிரிவுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
அந்தந்த துறைகளிலேயே மொழிபெயர்க்கப்பட்டாலும், அவற்றை சரிபார்க்க, மொழிபெயர்ப்பு பிரிவுக்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.