14 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சி: தமிழக அரசு பெருமிதம்
14 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சி: தமிழக அரசு பெருமிதம்
ADDED : ஆக 14, 2025 03:20 AM
சென்னை:'தமிழகம் 14 ஆண்டுகளில் இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது. இது, முதல்வர் ஸ்டாலினின் தொலைநோக்கு சிந்தனைகளுக்கு கிடைத்துள்ள மகத்தான வெற்றி' என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமான தமிழகம், வளர்ச்சி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது. புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் திருத்தப்பட்ட மதிப்பீட்டுகளின்படி, 2024 - 25ம் ஆண்டு, 11.2 சதவீதம் பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இந்த இரட்டை இலக்க வளர்ச்சி, கடந்த 14 ஆண்டுகளில், மாநிலத்தின் சிறந்த வளர்ச்சியாகும்.
கடைசியாக 2010 - 11ம் ஆண்டு, 13.1 சதவீத வளர்ச்சி பதிவாகி இருந்தது. இது 6.5 சதவீதம் என்ற தேசிய சராசரியை விட மிக அதிகமாகும். இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம், இரண்டாம் நிலை துறையாகிய உற்பத்தி, கட்டுமானம் மற்றும் பயன்பாட்டு துறைகள் தான். உற்பத்தி துறை 2023 - 24ம் ஆண்டு 12.6 சதவீதம், 2024 - 25ம் ஆண்டு 14.7 சதவீதம் உயர்ந்த வளர்ச்சியை பெற்றுள்ளது.
கட்டுமானத் துறையும், இதே கால கட்டங்களில் 15.9 மற்றும் 11.6 சதவீதம் வளர்ச்சி பெற்று குறிப்பிட்ட பங்களிப்பை வழங்கியுள்ளது. தேசிய மற்றும் பிற மாநிலங்களின் தரவுகளுடன் ஒப்பிடுகையில், தமிழகத்தின் உற்பத்தி துறை தனித்து நிற்கிறது.
பொருளாதாரத்தில் இரட்டை இலக்க வளர்ச்சி வைத்து, தி.மு.க., அரசு படைத்துள்ள வரலாற்று சாதனை திடீரென்று நிகழ்த்தப்பட்டது அல்ல.
முதல்வர் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியை குறிக்கோளாக வைத்து, அல்லும், பகலும் பாடுபட்டு வருகிறார். அதன் காரணமாகவே, தமிழகம் படிப்படியாக முன்னேறி வருகிறது. தமிழகம் 14 ஆண்டுகளில் இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.