அஜித்குமார் குடும்பத்திற்கு ரூ.7.5 லட்சம்; தமிழக அரசு வழங்கியது இழப்பீடு
அஜித்குமார் குடும்பத்திற்கு ரூ.7.5 லட்சம்; தமிழக அரசு வழங்கியது இழப்பீடு
ADDED : ஜூலை 15, 2025 06:28 AM

சிவகங்கை; சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் தனியார் நிறுவன காவலாளி அஜித்குமார் 29, போலீஸ் விசாரணையில் மரணமடைந்ததையடுத்து அவரது குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.7.50 லட்சம் இழப்பீடு வழங்கியது.
இக்கோயிலில் ஜூன் 27 மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த பேராசிரியை நிகிதா தாயாருடன் தரிசனம் செய்ய வந்த போது காரை நிறுத்தும்படி அஜித்குமாரிடம் கூறியுள்ளார். அப்போது காரிலிருந்த 9.5 பவுன் நகைகளை திருடு போனதாக நிகிதா புகார் அளித்தார். இப்புகாரின்பேரில் மானாமதுரை குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் 6 பேர் அஜித்குமாரை 2 நாட்களாக வெளியிடங்களில் வைத்து தாக்கி விசாரித்ததில் மரணம் அடைந்தார்.
இச்சம்பவத்தையடுத்து சிவகங்கை எஸ்.பி., ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். மானாமதுரை டி.எஸ்.பி., சண்முகசுந்தரம், தனிப்படை வாகன டிரைவர் ராமசந்திரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஐந்து போலீசார் கைது செய்யப்பட்டனர்.
அஜித்குமாரின் தம்பி நவீன்குமாருக்கு ஆவினில் வேலை, தேளி கிராமத்தில் 3 சென்ட் இடத்தை அரசு வழங்கியது. ஆனால் இதில் திருப்தி இல்லை என நவீன்குமார் தெரிவித்தார்.
இதற்கிடையில் திருப்புவனம் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தாலும் விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்றி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை நீதிபதிகள் மக்களின் நம்பிக்கையையும், நன்மதிப்பையும் பெற போலீஸ் தாக்கியதில் மரணம் அடைந்த அஜித்குமார் குடும்பத்திற்கு இடைக்கால இழப்பீடு வழங்குவதை அரசு பரிசீலிக்க வேண்டும் என கருத்து தெரிவித்தனர்.
இதையடுத்து அஜித்குமார் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ.7.50 லட்சம் வழங்கப்படும் என பொதுத்துறை (சட்டம் ஒழுங்கு) அரசு செயலர் ரீட்டா ஹரீஸ் தாக்கர் அறிவித்தார். நேற்று மாலை இந்நிதிக்கான காசோலையை அமைச்சர் பெரிகருப்பன், கலெக்டர் பொற்கொடி, தமிழரசி எம்.எல்.ஏ., ஆகியோர் அஜித்குமாரின் தாயாரிடம் வழங்கினர்.