ஏ.டி.ஜி.பி., சஸ்பெண்ட் திரும்ப பெற தமிழக அரசு மறுப்பு
ஏ.டி.ஜி.பி., சஸ்பெண்ட் திரும்ப பெற தமிழக அரசு மறுப்பு
UPDATED : ஜூன் 19, 2025 11:58 PM
ADDED : ஜூன் 19, 2025 11:27 PM

'தமிழக கூடுதல் டி.ஜி.பி., ஜெயராமின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய முடியாது' என தமிழக அரசு தெரிவித்ததை அடுத்து, இந்த வழக்கின் விசாரணையை, சென்னை உயர் நீதிமன்றத்தின் வேறு நீதிபதிக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருத்தணி, திருவாலங்காடு காதல் ஜோடி திருமண விவகாரத்தில், மணமகனின் சகோதரரான 17 வயது சிறுவன் கடத்தப்பட்டார்.
மனு தாக்கல்
இந்த வழக்கில், கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக, தமிழக கூடுதல் டி.ஜி.பி., ஜெயராமை கைது செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சீருடையிலேயே அவர் கைது செய்யப்பட்டதுடன், சஸ்பெண்டும் செய்யப்பட்டார்.
கைது நடவடிக்கையையும், சஸ்பெண்ட் உத்தரவையும் ரத்து செய்யக்கோரி ஏ.டி.ஜி.பி., ஜெயராம், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதிகள் உஜ்ஜல் புயான், மன்மோகன் அமர்வில் இரு தினங்களாக விசாரிக்கப்பட்டது. நேற்றும் விசாரணை தொடர்ந்தது.
'ஏ.டி.ஜி.பி., ஜெயராமை பணியிடை நீக்கம் செய்ததை திரும்ப பெற முடியுமா?' என, தமிழக அரசிடம் நீதிபதிகள் கேட்டிருந்தனர். அதற்கு, தமிழக அரசு தரப்பு மூத்த வழக்கறிஞர் சித்தார்த் தவே நேற்று பதில் அளிக்கையில், ''சிறுவன் கடத்தல் வழக்கு விசாரணையில் இருக்கும் நேரத்தில், பணியிடை நீக்கத்தை திரும்ப பெற முடியாது. அதற்கு, தமிழக அரசின் விதிமுறைகள் இடம் அளிக்கவில்லை,'' என்றார்.
'இந்த வழக்கை, சென்னை ஐகோர்ட்டின் வேறு அமர்வுக்கு மாற்ற முடியுமா?' என நீதிபதிகள் கேட்டனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டு பதில் அளிப்பதாக தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதையடுத்து, விசாரணை சிறிது நேரத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும் விசாரணை துவங்கியதும், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றவும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வேறு நீதிபதி முன் விசாரணைக்கு பட்டியலிடவும், தமிழக அரசு தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டது.
அதோடு, ''பல்வேறு வழக்குகளில் நாங்கள் இவ்வாறு தான் விசாரிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் எங்களை கட்டுப்படுத்துகிறது. அவை எந்தெந்த வழக்குகள் என்பதை குறிப்பிட விரும்பவில்லை,'' என தமிழக அரசு வழக்கறிஞர் தவே சொன்னார்.
கோரிக்கை
ஏ.டி.ஜி.பி., தரப்பு வழக்கறிஞர் அரவிந்த் குமார் சவுத்ரி, ''பணியிடை நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும்,'' என கோரிக்கை வைத்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
சில சமயங்களில் உயர் நீதிமன்றங்கள் தங்கள் வரம்பை மீறி நிர்வாக முடிவுகளை எடுக்கின்றன. சிறுவன் கடத்தப்பட்ட விவகாரத்தில், ஏ.டி.ஜி.பி., ஜெயராம் தொடர்புடைய வழக்கை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்ற உத்தரவிடுகிறோம்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றும்படி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியை அறிவுறுத்துகிறோம். ஏ.டி.ஜி.பி., ஜெயராமை கைது செய்யும்படி சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
- டில்லி சிறப்பு நிருபர் -