ADDED : ஜன 28, 2025 07:31 PM
சென்னை:'தொழில் துறை அமைச்சர் ராஜா, மாநிலத்திற்கு முதலீட்டை ஈர்க்கவோ அல்லது ஏற்கனவே இருக்கும் முதலீட்டை தக்க வைக்கவோ முயற்சி எடுக்கவில்லை' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவரது, அறிக்கை:
கோவையில், 2,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை கொண்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனம், எந்த அறிவிப்பும் வழங்காமல் மூடப்பட்டதாக தெரிகிறது. அந்நிறுவனம், ஊழியர்களிடம் இருந்து வாங்கப்பட்ட ஆவணங்களை திருப்பி தரவில்லை; நிலுவை சம்பளமும் வழங்கவில்லை.
தொழில் துறை அமைச்சர் ராஜா, மாநிலத்திற்கு முதலீடுகளை ஈர்க்கவே அல்லது ஏற்கனவே இருக்கும் முதலீடுகளை தக்கவைத்து கொள்ளவோ முயற்சி எடுக்கவில்லை. கோவைவை சேர்ந்த இரு, 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள், கர்நாடகா மாநிலம், பெங்களூருக்கு சமீபத்தில் சென்று விட்டன.
கடந்த, 2022ல் துபாயில் கையெழுத்திட்ட, 6,000 கோடி ரூபாய் முதலீடு இன்னும் செயல்பாட்டிற்கு வரவில்லை. எனவே, சுவிட்சர்லாந்து டாவோசில் நடந்த உலக பொருளாதார மன்ற கூட்டத்தில் இருந்து, வெறுங்கையுடன் தமிழக அரசு திரும்பியதில், ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

