சாராய பணத்தில் நடக்கும் தமிழக அரசு : மத்திய வேளாண் அமைச்சர் ஆவேசம்
சாராய பணத்தில் நடக்கும் தமிழக அரசு : மத்திய வேளாண் அமைச்சர் ஆவேசம்
ADDED : ஜன 06, 2026 08:07 AM

ஈரோடு: பா.ஜ., விவசாய அணி சார்பில், ஈரோடு வில்லரசம்பட்டியில் விவசாயிகள் விழிப்புணர்வு மாநாடு நேற்று மாலை நடந்தது.
இதில் பங்கேற்ற மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் பேசியதாவது: பிரதமர் மோடி தலைமையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் நாட்டை வலிமைப்படுத்தி கொண்டிருக்கிறது. உலகில், 11வது இடத்தில் இருந்த நாம், பிரதமர் மோடி நடவடிக்கையால் ஐந்தாவது இடத்துக்கு வந்துள்ளோம். விரைவில் மூன்றாவது இடத்துக்கு வருவோம். விவசாயிகளை பாதிக்கும் செயலை செய்ய மாட்டோம் என்று கூறியதுடன், அவர்களின் முன்னேற்றத்துக்காக பல திட்டங்களை, மோடி கொண்டு வருகிறார்.
கிசான் சம்மான் யோஜ்னா திட்ட பயனாளிகள் பட்டியலை, தமிழக அரசிடம் கேட்டோம். ஆனால், விவசாயிகளுக்கு மத்திய அரசு நேரடியாக பணம் கொடுத்து விடுமோ என்ற பயத்தால் முதல்வர் ஸ்டாலின், இன்னும் அந்த பட்டியலை வழங்கவில்லை. 125 நாள் வேலை திட்ட பயன்கள் நேரடியாக பெண்கள், ஆண்களுக்கு சென்று சேர வேலை உறுதியளிப்பு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் வேலை தரவில்லை என்றால், 15 நாட்களுக்கு உரிய பணம், வட்டியோடு தர வேண்டும்.
ஏழைகள், விவசாயிகளை பற்றி, தி.மு.க., கவலை கொள்ளவில்லை. இந்த ஆட்சி மாற்றப்பட வேண்டும். இங்கு சாராயம் ஆறாக ஓடுகிறது. சாராய பணத்தில் அரசு நடக்கிறது. இவ்வாறு இருந்தால் குழந்தைகளின் எதிர்காலம் என்ன ஆவது? தி.மு.க., என்ற தீய சக்தி வீழ்த்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

