பிளாஸ்டிக் கவரில் கட்டப்படும் உணவுகள் விஷமா? சென்னை ஐஐடி உதவியை நாடிய தமிழக அரசு
பிளாஸ்டிக் கவரில் கட்டப்படும் உணவுகள் விஷமா? சென்னை ஐஐடி உதவியை நாடிய தமிழக அரசு
ADDED : ஜன 24, 2026 09:12 PM

சென்னை: பிளாஸ்டிக் கவர்களில் கட்டப்பட்ட சூடான டீ, பால் உள்ளிட்ட உணவுப் பொருட்களை உட்கொள்வதன் மூலம் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய சென்னை ஐஐடி உதவியை தமிழக அரசு நாடியுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருமுறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு மறு ஆய்வு செய்யக்கோரி, தமிழகம், புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
கடந்த 2024ம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பால் மற்றும் பால் பொருட்கள், பிஸ்கட்கள், உணவு பொருட்கள் உள்ளிட்டவற்றை பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து விற்க தடையில்லை, என்று உத்தரவிட்டிருந்தது. இதனிடையே, பிளாஸ்டிக் துகள்களில் இருக்கும் பிஸ்பெனால் ஏ என்ற வேதிப்பொருள், மனித உடலின் ஹார்மோன் செயல்பாடுகளைச் சிதைக்கும் தன்மை கொண்டது என்று கோவை பிஎஸ்ஜி மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வு நீதிபதிகளை அதிர்ச்சியடையச் செய்தது.
இதனால், பிளாஸ்டிக் கவர்களில் கட்டப்படும் சூடான டீ,பால் மற்றும் சாம்பார் போன்ற உணவுப் பொருட்களை உட்கொள்வதனால், மனிதர்களுக்கு உடலில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விரிவான ஆய்வு நடத்த தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.
இது குறித்து ஆய்வு செய்ய, உணவுப் பாதுகாப்புத்துறை ஆணையர், சென்னை ஐஐடி உதவியை நாடியுள்ளார். இந்தத் தகவலை தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

