குழந்தை தொழிலாளர்களை தமிழக அரசு மீட்க வேண்டும் சித்ரவதைக்குள்ளான சிறுமி பேட்டி
குழந்தை தொழிலாளர்களை தமிழக அரசு மீட்க வேண்டும் சித்ரவதைக்குள்ளான சிறுமி பேட்டி
ADDED : ஜன 26, 2024 10:07 PM
மதுரை:''குழந்தை தொழிலாளர்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, சென்னை பல்லாவரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., மகன், மருமகளால் சித்ரவதைக்கு உள்ளானதாக புகார் தெரிவித்துள்ள சிறுமி வலியுறுத்தினார்.
சென்னை பல்லாவரம் தி.மு.க., எம்.எல்.ஏ., கருணாநிதி. அவரது மகன் ஆன்ட்ரோ, மருமகள் மார்லினா. இவர்கள் இருவரும் உளுந்துார்பேட்டை பகுதியை சேர்ந்த ஒரு சிறுமியை வீட்டு வேலைக்காக அழைத்துச் சென்று, சித்ரவதை செய்ததாக திருவான்மியூர் போலீசார் வழக்கு பதிந்தனர். ஆன்ட்ரோ, மார்லினா கைதாகினர்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, மதுரையில் எவிடன்ஸ் அமைப்பு வாயிலாக கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது. எவிடன்ஸ் செயல் இயக்குனர் கதிர் கூறியதாவது:
கைது நடவடிக்கை தாமதமானது வருத்தமளிக்கிறது. ஆந்திராவில் பிடித்ததாக சொல்லும் கதை நம்பத் தகுந்ததாக இல்லை. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் வரை இருவருக்கும் ஜாமின் அனுமதிக்கக்கூடாது.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு எந்த உதவியும் செய்ய முன்வரவில்லை. சிறுமி மற்றும் அவரது சகோதரருக்கான கல்விச் செலவை அரசே ஏற்க வேண்டும். சிறுமியின் குடும்பத்தினருக்கு, 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வழக்கை, சென்னை நீதிமன்றத்தில் நடத்தாமல் விழுப்புரம் நீதிமன்றத்தில் நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வீட்டு வேலை, பல்வேறு தொழில்களில் ஈடுபடுத்த பல சிறுவர்கள் கடத்தப்பட்டுள்ளனர். அவர்களை தமிழக அரசு மீட்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பாதிக்கப்பட்ட சிறுமி, ''இனி எந்த ஒரு சிறுமிக்கும், இதுபோன்ற கொடுமைகள் நடக்கக்கூடாது. குழந்தை தொழிலாளர்களை அரசு மீட்க வேண்டும். அரசு சார்பில் எனக்கு நிவாரணம் வழங்காவிட்டாலும், ஆறுதலுக்கு கூட யாரும் என்னை பார்க்க வரவில்லை,'' என்றார். சிறுமியின் தாய், ''பணக்காரர்களுக்கு மட்டும் தான் அரசு உதவுமா,'' என்றார்.

