மெத்தனால் உரிமம் நடைமுறை எளிதாக்கியது தமிழக அரசு
மெத்தனால் உரிமம் நடைமுறை எளிதாக்கியது தமிழக அரசு
ADDED : ஏப் 21, 2026 01:41 AM
சென்னை: மருந்து பயன்பாட்டுக்கான மெத்தனால் உரிமம் பெறும் நடைமுறையை, இணையதளம் வழியே பெறும் வகையில், தமிழக அரசு எளிமைப்படுத்தி உள்ளது.
மருந்து உற்பத்தித் துறையில், மெத்தனால் ஒரு முக்கிய கரைப்பான் சேர்மமாகவும், மூலப்பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.
'ஸ்டேடின்' போன்ற கொழுப்பு சத்தை குறைக்கும் மருந்துகள், 'ஸ்ட்ரெப்டோமைசின்' போன்ற 'ஆன்ட்டிபயாடிக்' மருந்துகள் தயாரிப்பில், மெத்தனால் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், தரப்பரிசோதனையிலும் கரைப்பானாக பயன்படுத்தப்படுகிறது. மருந்தியல் கல்லுாரிகளில் உள்ள ஆய்வகங்களுக்கும் மெத்தனால் தேவை அதிகமாக உள்ளது.
தமிழகத்தில், மெத்தனால் வாங்குவதற்கான உரிமம் பெற, கடுமையான நடைமுறைகளும், விதிகளும் பின்பற்றப்படுவதாக மருந்து உற்பத்தியாளர்கள் நீண்ட காலமாக புகார் கூறி வந்தனர்.
பெரிய தொழிற்சாலைகள் மட்டுமன்றி, சிறு மருந்து உற்பத்தி நிறுவனங்களும், ஆய்வகங்களும், குறைந்த அளவில் மெத்தனால் பெறுவதில் கூட சிக்கல் நிலவுவதாக தெரிவித்தனர்.
இந்நிலையில், தேசிய தகவல் மையத்தால் உருவாக்கப்பட்ட, 'இ - கலால்' என்ற இணையதளம் வாயிலாக, மெத்தனால் உரிமம் பெறும் நடைமுறைக்கு, தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
'ஆண்டுக்கு 500 லிட்டருக்கும் குறைவாக தேவைப்படும் விண்ணப்பதாரர்களுக்கும், இந்த எளிமைப்படுத்தப்பட்ட முறை பொருந்தும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறைக்கு, மாநில மருந்து உற்பத்தியாளர் சங்கம் வரவேற்பும், நன்றியும் தெரி வித்துள்ளது.
