ADDED : செப் 06, 2025 01:55 AM
சென்னை:'நீர் பற்றாக்குறையை போக்கவும், வெள்ள பாதிப்பை தடுக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது' என, நீர்வளத்துறை செயலர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.
சி.ஐ.ஐ., எனப்படும் இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில், சென்னையில் நேற்று, 'நீர் பற்றாக்குறையால் தொழில் துறை எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள்' என்ற மாநாடு நடந்தது. இதில், அதிகாரிகள் பேசியதாவது:
தமிழக நீர்வளத்துறை செயலர் ஜெயகாந்தன்: நீர் பற்றாக்குறையை சமாளிக்க, உள்கட்டமைப்பு வசதிகள், தொழில் நுட்பம், கூட்டாண்மை வாயிலாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தேர்வாய்கண்டிகையில் புதிய நீர்த்தேக்கம், சிவகங்கையில் குறைந்த செலவில் அணைகள், ஓசூர் கெலவரப்பள்ளி அணையிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரை சிப்காட் தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்துதல் போன்ற முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.
வெள்ள பாதிப்பை தடுக்க, சென்னை அடையாறு ஆற்றங்கரையில் 600 ஆக்கிரமிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஆக்கிரமிப்புகளை தடுக்க செயற்கைக்கோள் அடிப்படையிலான கண்காணிப்பு, ஆறுகளை துார்வார 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு உள்ளிட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
சென்னை குடிநீர் வாரிய நிர்வாக இயக்குநர் கவுரவ் குமார்: குடிநீர் தேவைக்காக, நன்னீர் நீர்நிலைகளை சார்ந்திருப்பதை குறைக்க வேண்டும்.
நெம்மேலியில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தில், தொழிற்சாலைகளுக்கும் தண்ணீர் வழங்கப்பட உள்ளது. தண்ணீரை சுத்திகரித்து, மறு பயன்பாடு செய்வது அவசியம். தொழில்நுட்பங்கள், ஒருங்கிணைந்த வினியோக வசதிகள் வாயிலாக, தொழில் துறைக்கும், பொதுமக்களுக்கும் தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
தமிழ்நாடு நீர் முதலீட்டு நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி சாஜித் ஹூசைன்: தமிழகத்தில் நீர் மேலாண்மையை வலுப்படுத்த, நீர்வளத்துறையுடன் இணைந்து, புதுமையான முயற்சிகளை, தமிழ்நாடு நீர் முதலீட்டு நிறுவனம் செய்து வருகிறது.
சென்னையில் பகிங்ஹாம் கால்வாய் மற்றும் நதிகள் சீரமைப்பை மேற்கொண்டு வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.