தனியார் பஸ் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு விரைவில் அனுமதி
தனியார் பஸ் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு விரைவில் அனுமதி
UPDATED : ஆக 01, 2025 07:30 AM
ADDED : ஆக 01, 2025 03:28 AM

சென்னை:''தனியார் பஸ் உரிமையாளர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும்,'' என, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில், அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்துள்ள, மூன்று நாள் பயணியர் வாகன கண்காட்சியை, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று துவங்கி வைத்தார்.
'வால்வோ, டாடா, டி.வி.எஸ்.,' உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு, அதிநவீன பஸ், வேன், கார்கள் காட்சிப்படுத்தப்பட்டன.'பேட்டரி சார்ஜிங்' கருவிகள், புதிய வகை உதிரிபாகங்கள் இடம் பெற்றன.
இதையடுத்து நடந்த விழாவில் சிறப்பாக செயல்பட்ட ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு விருதுகளை வழங்கி அமைச்சர் கவுரவித்தார்.
பின், அவர் பேசியதாவது: நாட்டிலேயே மோட்டார் வாகன உற்பத்தியில், தமிழகம் முக்கிய இடத்தை பெற்றிருக்கிறது. அதேபோல, உற்பத்தியாகும் வாகனங்களின் வரிவருவாய் வாயிலாக, பொருளாதார வளர்ச்சியையும் எட்டுகிறோம்.
இன்றைய சூழலில், ஆம்னி பஸ்கள், தனியார் பஸ் தொழில் நடத்துவதே சிரமமான விஷயம் என்பதை, நான் அறிவேன். இதனால், பல நேரங்களில் சங்கத்துக்கு உறுதுணையாக இருப்பதால், பலரால் விமர்சிக்கப்பட்டு இருக்கிறேன்.
அரசு போக்குவரத்து துறையை போல, தனியார் பஸ் தொழிலும் சிறப்பாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே, பொது மக்களுக்கு பரவலாக சேவை வழங்க முடியும். இதை சொல்லும் நேரத்தில், தனியார் பஸ் உரிமையாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என, அவர்களுக்கு வருத்தம் இருக்கும். தற்போதைய அரசியல் சூழலில், அவர்களின் ஒரே ஒரு கோரிக்கையை மட்டும் செய்ய முடியாத சூழல் இருக்கிறது. காலம் வரும் போது, அதுவும் சரி செய்யப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
சூசகமான பதில் கட்டண உயர்வு வேண்டும் என, தனியார் பஸ் உரிமையாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, கருத்துகேட்பு கூட்டம் முடிந்த நிலையில், போக்குவரத்து துறை அமைச்சரின் இந்த பேச்சு, தனியார் பஸ் கட்டண உயர்வுக்கான சூசகமான பதிலாக இருப்பதாக, தனியார் பஸ் உரிமையாளர்கள் கருதுகின்றனர்.
இந்நிகழ்ச்சியில், அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன், செயலர் திருஞானம், பொருளாளர் தாஜுதீன், தமிழ்நாடு தனியார் பஸ் உரிமையாளர்கள் சம்மேளன செயலர் தர்மராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.