ADDED : ஏப் 09, 2025 01:16 AM
டாஸ்மாக் தலைமையகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை தொடர்பான வழக்கை, சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து வேறு மாநில உயர் நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரிய, தமிழக அரசின் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.
இதையடுத்து, அந்த மனுவை தமிழக அரசு திரும்ப பெற்றது.
டாஸ்மாக் தலைமையகத்தில், அமலாக்கத்துறை நடத்திய சோதனையை எதிர்த்து, தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை, உயர் நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தமிழக அரசு சமீபத்தில் தாக்கல் செய்தது.
அதில், 'டாஸ்மாக் தொடர்பான வழக்கை, சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து, வேறு மாநில உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும்' என்று, கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
'அரசியல் சாசனப்பிரிவு, 139 ஏ-ன் கீழ், ஒரு வழக்கை ஒரு உயர் நீதிமன்றத்தில் இருந்து, வேறொரு உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற, உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. அந்த அதிகாரத்தை பயன்படுத்தி, இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என்றும், தமிழக அரசின் மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை படித்து பார்த்த நீதிபதிகள், 'ஏற்கனவே இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
'அப்படி இருக்கும் போது, உங்களுக்கு ஏன் இவ்வளவு அவசரம்? இப்போது எதற்காக உச்ச நீதிமன்றத்தை நாடினீர்கள்?' என, தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர்களிடம் கேள்வி எழுப்பினர்.
சென்னை உயர் நீதிமன்றமே, இந்த வழக்கை விசாரிக்கட்டும் என்று கூறிய நீதிபதிகள், தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்தனர்.
அப்போது குறுக்கிட்ட தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர்கள், மனுவை திரும்ப பெற அனுமதி கேட்டனர். 'நாங்கள் எதுவும் சொல்லப் போவதில்லை; உங்களுக்கு வேண்டுமென்றால் மனுவை திரும்ப பெற்றுக் கொள்ளுங்கள்' என, நீதிபதிகள் தெரிவித்தனர்.

