ADDED : டிச 06, 2024 11:26 AM

அரியலூர்: 'தமிழக அரசு அறிவித்த வெள்ள நிவாரணம் ரூ.2 ஆயிரம் போதாது' என விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் திருமாவளவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணம் போதாது என்ற கோரிக்கை மக்களிடம் இருந்து எழுந்துள்ளது. புதுச்சேரியில் ஒரு ரேஷன் அட்டை தாரர்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எதிர்பார்ப்பு தமிழக மக்கள் மத்தியிலும் உள்ளது. இந்த கோரிக்கையை முதல்வர் ஸ்டாலின் பரிசீலிக்க வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி, வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.
ரூ.10 லட்சம்
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது. வெள்ளத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். தமிழக அரசு கேட்டுள்ள வெள்ள நிவாரண நிதியை வழங்குமாறு, மத்திய அமைச்சர்
நித்யானந்த் ராயை சந்தித்து, கோரிக்கை மனு கொடுத்துள்ளேன். அவர் பரிசீலனை செய்யப்படும் என கூறியுள்ளார். வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியில் போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு நிவாரண பணிகளை மேற்கொண்டு வருவது ஆறுதல் அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.