தமிழக கவர்னர் - துணை ஜனாதிபதி சந்திப்பு; உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து ஆலோசனை
தமிழக கவர்னர் - துணை ஜனாதிபதி சந்திப்பு; உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து ஆலோசனை
UPDATED : ஏப் 20, 2025 05:55 AM
ADDED : ஏப் 19, 2025 07:39 PM

'மாநில அரசுகள் அனுப்பி வைக்கும் தீர்மானத்தின்மீது ஒப்புதல் அளிப்பது குறித்து குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் முடிவெடுக்க வேண்டும்' என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கரை, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக்களுக்கு, ஒப்புதல் தருவதில் தமிழக கவர்னர் காலம் தாழ்த்துவதாக கூறி, தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், சமீபத்தில் உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்திருந்தது.
மாநில அரசு அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தருவதற்கு, கவர்னருக்கும் ஜனாதிபதிக்கும் குறிப்பிட்ட கால நிர்ணயம் செய்ய வேண்டும் என, அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மாநில அரசுகளுக்கு சாதகமாகவும், கவர்னர்களுக்கு பாதகமாகவும் அமைந்த இந்த தீர்ப்பு, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர், 'ஜனாதிபதிக்கு உத்தரவிட, உச்ச நீதிமன்றத்தால் முடியாது' என்றும், 'சட்டம் இயற்றும் அதிகாரம் படைத்த சபைகளின் முடிவுகளில், நீதித்துறை செயல்பாடு சரியல்ல' என்றும் கடுமையாக விமர்சனம் செய்தார்.
தமிழகம் மட்டுமில்லாலம், அனைத்து மாநிலங்களுக்கும், சமீபத்திய உச்ச நீதிமன்ற உத்தரவு பொருந்தும் என்பதால், இதை கடுமையாக எதிர்கொள்ள மத்திய அரசு முடிவெடுத்து, தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் செய்துள்ளது. கூடவே, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை செல்லாததாக, புதிய சட்டம் இயற்றுவது குறித்தும் தீவிர ஆலோசனையில் உள்ளது மத்திய அரசு.
மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் அலுவலகம், மத்திய உள்துறை, பார்லிமென்ட் விவகாரத்துறை, சட்டத்துறை, பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள், இது தொடர்பாக அடுத்தடுத்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், டில்லிக்கு வந்திருக்கும் தமிழக முதல்வர் ரவி, நேற்று துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கரை சந்தித்து, வெகு நேரம் ஆலோசனையில் ஈடுபட்டார். கவர்னர் செயல்பாடு குறித்த சமீபத்திய உச்ச நீதிமன்ற செயல்பாடுகள் மற்றும் அது தொடர்பான மத்திய அரசு எடுக்கவிருக்கும் நடவடிக்கைகள் குறித்தே, இருவரும் விவாதித்ததாக, துணை ஜனாதிபதி அலுவலக வட்டாரம் தெரிவித்தது.
டில்லியில் தங்கியிருக்கும் கவர்னர் ரவி, அடுத்தடுத்தும் முக்கிய சந்திப்புகளை நிகழ்த்திவிட்டு, இன்று சென்னை திரும்பக்கூடும் என தெரிகிறது.
-நமது டில்லி நிருபர்-